திருப்பூர் ரெயில் நிலையத்தில் 500 வடமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை
திருப்பூர் ரெயில் நிலையத்தில் 500 வடமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை
திருப்பூர்:
திருப்பூர் ரெயில் நிலையத்தில் 500 வடமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 3-வது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வடமாநில தொழிலாளர்கள்
திருப்பூர் மாவட்டம் தொழிலாளர்கள் நிறைந்த மாவட்டமாக இருந்து வருகிறது. இங்கு பனியன் தயாரிப்பு, கறிக்கோழி, விவசாயம், எண்ணெய் உற்பத்தி என ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்களும் வேலை செய்து வருகிறார்கள். குறிப்பாக வடமாநிலத்தினர் பலர் திருப்பூர் மாவட்டத்தில் வேலை செய்து வருகிறார்கள்.
வேலைவாய்ப்பு அதிகமாக இருந்து வருவதால் திருப்பூருக்கு ரெயில் மூலம் வடமாநிலங்களில் ஏராளமான தொழிலாளர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் கொரோனா 3-வது அலை அச்சுறுத்தல் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மாநகராட்சி சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
500 பேருக்கு பரிசோதனை
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
வடமாநிலங்களில் இருந்து வருகிற தொழிலாளர்களுக்கு திருப்பூர் ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா 3-வது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக இந்த பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் நேற்று தன்பாத்தில் இருந்து ஆலப்புழா மற்றும் புதுடெல்லியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரெயில்களில் திருப்பூருக்கு வந்த 500 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களின் விவரமும் சேகரிக்கப்பட்டுள்ளது. இதில் தொற்று உறுதி செய்யப்படுகிறவர்களை தொடர்புகொண்டு சிகிச்சை பெறவும், தனிமைப்படுத்திக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story