லெட்சுமாங்குடி சாலையில் மீண்டும் வேகத்தடை அமைக்க வேண்டும்
லெட்சுமாங்குடி சாலையில் மீண்டும் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர்:
லெட்சுமாங்குடி சாலையில் மீண்டும் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திராபதீஸ்வரர் கோவில்
கூத்தாநல்லூர் லெட்சுமாங்குடி உத்திராபதீஸ்வரர் கோவில் எதிரில் உள்ள கடைவீதி சாலை மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாக இருந்து வருகிறது. இந்த கடைவீதி சாலை திருவாரூர், மன்னார்குடி வழித்தடத்தில் உள்ளதால் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த பிரதான சாலையாக உள்ளது. உத்திராபதீஸ்வரர் கோவில் அருகில் பஸ் நிறுத்தம் உள்ளதால் பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகமாக காணப்படுகிறது.
இதேபோல் கூத்தாநல்லூர் மற்றும் மரக்கடை பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இந்த சாலையை கடந்து தான் சென்று வருகின்றனர். மேலும் கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனை, தாசில்தார் அலுவலகம், நகராட்சி அலுவலகம், தீயணைப்பு நிலைய அலுவலகம் மற்றும் கால்நடை மருத்துவமனை போன்ற இடங்களுக்கு இந்த சாலையை கடந்து தான் அப்பகுதி மக்கள் சென்று வருகின்றனர்.
மீண்டும் வேகத்தடை அமைக்க வேண்டும்
இந்தநிலையில் உத்திராபதீஸ்வரர் கோவில் அருகில் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகனங்கள் நெரிசலை தவிர்க்க ஏற்கனவே வேகத்தடை அமைக்கப்பட்டு இருந்தது. பின்னர் சாலை பராமரிப்பு காரணமாக வேகத்தடை அகற்றப்பட்டது. ஆனால் அகற்றப்பட்ட வேகத்தடை மீண்டும் அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும், சாலையை கடந்து செல்வதில் சிரமம் ஏற்படுவதாகவும் வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உத்திராபதீஸ்வரர் கோவில் அருகில் இருந்து அகற்றப்பட்ட வேகத்தடையை மீண்டும் அமைத்து தர வேண்டும் என்று வாகன ஓட்டிகள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story