கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தர்மபுரி,
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி அந்தந்த பகுதிகளிலுள்ள கிருஷ்ணர் மற்றும் பெருமாள் கோவில்களில் சாமிக்கு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.
தர்மபுரி ஆட்டுக்காரன்பட்டி ராதே கிருஷ்ணா பிருந்தாவனத்தில் தாயார் ருக்மணி அம்மையார் சமேத ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடந்தன. பின்னர் சாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடந்தது. விழாவையொட்டி சாமிக்கு பல்வேறு வகையான நெய் வேத்தியங்கள் வைத்து படையல் இடப்பட்டது. இந்த கோவிலில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சிகள் ரத்து
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி நடக்கும் சாமி திருவீதி விழா, உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரத்துசெய்யப்பட்டன.
இதேபோன்று தர்மபுரி கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில், அதகபாடி லட்சுமி நாராயண சாமி கோவில், அதியமான்கோட்டை சென்றாய பெருமாள் சாமி கோவில், மணியம்பாடி வெங்கட்ரமண சாமி கோவில், பழைய தர்மபுரி வரத குப்பம் வெங்கட்ரமண சாமி கோவில், செட்டிகரை பெருமாள் கோவில், அக்கமனஅள்ளி ஆதிமூல பெருமாள் கோவில் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
காரிமங்கலம்
காரிமங்கலம் அக்ரஹாரத்தில் உள்ளராமர் கோவில், லட்சுமிநாராண சாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நடந்தது.
Related Tags :
Next Story