கிருஷ்ணகிரியில் வாலிபர் கொலையில் ஒருவர் கைது
கிருஷ்ணகிரியில் வாலிபர் கொலையில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அகமத். இவரது மகன் இம்ரான் (வயது 22). வெல்டிங் கடையில் வேலை செய்து வந்தார். மேலும் சண்டைக்கோழிகள் வாங்கி விற்கும் வியாபாரமும் செய்து வந்தார். சண்டைக்கோழி பந்தய போட்டிகளிலும் இவர் பங்கேற்று வந்தார்.
இந்த நிலையில் இவர் கிருஷ்ணகிரி நேதாஜி சாலை பகுதியை சேர்ந்த மார்கோ (56) என்பவரிடம் சண்டைக்கோழியை வாங்கினார். அந்த கோழியுடன் ஆந்திர மாநிலத்தில் நடந்த பந்தய போட்டியில் பங்கேற்றார். இந்த போட்டியில் கோழி சரியாக பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் இம்ரான், மார்கோ மீது ஆத்திரம் அடைந்தார். நீங்கள் தந்த கோழி சரியாக பங்கேற்கவில்லை என மார்கோவிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது.
வாலிபர் குத்திக்கொலை
இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி கிருஷ்ணகிரி பழையபேட்டை முருகன் தியேட்டர் அருகில் இம்ரான் மார்கோ இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மார்கோ மற்றும் அவரது மகன் குல்பி என்கிற மணிமாறன் (30) ஆகிய 2 பேரும் இம்ரானை கத்தியால் சரமாரியாக குத்தினார்கள். இதை தடுக்க சென்ற இம்ரானின் அண்ணன் சலாவுதீன் (36) என்பவருக்கும் கத்திக்குத்து விழுந்தது.இதில் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். பின்னர் மார்கோவும், அவரது மகன் குல்பியும் அந்த இடத்தில் இருந்து தப்பி சென்று விட்டனர். ரத்த காயங்களுடன் கிடந்த அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே இம்ரான் இறந்து விட்டார். சலாவுதீன் உயிர் பிழைத்தார்.
கைது
இந்த கொலை தொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மார்கோ, அவரது மகன் குல்பி என்கிற மணிமாறன் ஆகிய 2 பேரை தேடி வந்தனர். இதில் குல்பி என்கிற மணிமாறனை நேற்று போலீசார் கைது செய்தனர். விசாரணையில் குல்பி ஏற்கனவே கொலை வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறையில் இருந்த போது அங்கு போக்சோ வழக்கில் கைதாகி சிறையில் இருந்த பிரபா என்பவருடன் நட்பில் இருந்ததும், உஸ்தலப்பள்ளியை சேர்ந்த அவரது வீட்டில் மணிமாறன் தங்கி இருந்ததும் தெரிய வந்தது. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் தலைமறைவாக உள்ள மார்கோவை போலீசார் தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story