தமிழகம் முழுவதும் செப்டம்பர் இறுதிக்குள் 385 ஒன்றியங்களிலும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்படும்


தமிழகம் முழுவதும் செப்டம்பர் இறுதிக்குள் 385 ஒன்றியங்களிலும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்படும்
x
தினத்தந்தி 30 Aug 2021 4:57 PM GMT (Updated: 30 Aug 2021 5:00 PM GMT)

தமிழகம் முழுவதும் செப்டம்பர் இறுதிக்குள் 385 ஒன்றியங்களிலும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

ஓசூர்,

தமிழகம் முழுவதும் செப்டம்பர் இறுதிக்குள் 385 ஒன்றியங்களிலும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

அமைச்சர் ஆய்வு 

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்தார். அவர் சூளகிரி ஊராட்சி ஒன்றியம் பாத்தகோட்டா கிராமத்தில் மக்களை தேடி மருத்துவ திட்ட செயல்பாடுகளை ஆய்வு செய்தார். மேலும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 6 நபர்களின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று 2 மாதங்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்கினார்.

தொடர்ந்து ஓசூர் அரசு மருத்துவமனையில் ரூ.1.20 கோடியில் அசோக் லேலண்டு நிறுவன சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி கலனை அமைச்சர் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் (ஓசூர்) முன்னிலை வகித்தார். டி.ராமச்சந்திரன் (தளி), டி.மதியழகன் (பர்கூர்) வாழ்த்தி பேசினார்கள். தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒரு கோடி தடுப்பூசிகள் 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 42 ஆயிரத்து 55 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 41 ஆயிரத்து 489 பேர் குணமடைந்துள்ளனர். 235 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா சிகிச்சைக்காக 2,302 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளை மீறியதாக இதுவரை இந்த மாவட்டத்தில் ரூ.2 கோடியே 9 லட்சத்து 77 ஆயிரத்து 500 வசூலிக்கப்பட்டுள்ளது. 
கடந்த 2 மாதத்தில் 52 லட்சம் முதல் 57 லட்சம் வரையில கொரோனா தடுப்பூசி மத்திய அரசிடம் இருந்து வந்துள்ளது. செப்டம்பர் மாதத்திற்கு கோவிசீல்டு 90 லட்சத்து 24 ஆயிரத்து 70 மற்றும் கோவாக்சின் 14 லட்சத்து 74 ஆயிரத்து 100 என மொத்தம் 1 கோடியே 4 லட்சத்து 98 ஆயிரத்து 170 கொரோனா தடுப்பூசிகள் வர இருக்கிறது. கோவாக்சின் முதல் தவணை முடித்து 84 நாட்கள் கடந்தவர்களுக்கு இரண்டாவது தவணை வழங்க முன்னுரிமை வழங்கப்படும். எனவே, கோவாக்சின் முதல் தவணை போட்டு கொண்டவர்களுக்கு இந்த மாதத்தில் தடையில்லாமல் இரண்டாவது தவணை செலுத்தப்படும்.

385 ஒன்றியங்களிலும்... 

தமிழக முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பயன் பெற்ற மாவட்டங்களில் கிருஷ்ணகிரி 2-ம் இடத்தில் உள்ளது. இதை முதல் மாவட்டமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் உள்ள 385 ஒன்றியங்களில் செப்டம்பர் இறுதிக்குள் மக்களை தேடி மருத்துவ திட்டம் செயல்படுத்தப்படும். தற்போது இத்திட்டத்தின் மூலம் 10,000 முதல் 20,000 வரை மக்கள் பயன்பெற்று வருகின்றனர். செப்டம்பர் இறுதிக்கு பிறகு நாள்தோறும் 50,000 பேர் கண்டறியப்பட்டு அனைத்து விதமான நோய்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை வழங்கப்படும். மிக விரைவில் 1 கோடி பயனாளிகளுக்கு அவரவர் வீடுகளுக்கே தேடிச் சென்று அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்படும்.

காலிப்பணியிடங்கள் 

மருத்துவ துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். அதற்கான அறிவிப்பு பட்ஜெட் கூட்ட தொடரில் அறிவிக்கப்படும். ஓசூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வந்து கொண்டிருக்கிறது. இது குறித்து முதல்-அமைச்சர் முடிவெடுப்பார். 

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து வெளி மாநிலத்தில் இருந்து தமிழக எல்லைக்கு வரும் நபர்களுக்கு தொடர்மல் ஸ்கனர் மூலம் கொரோனா நோய் தொற்று பரிசோதனை ஓசூர் டி.வி.எஸ். சோதனைச்சாவடி அருகில் நடந்தது. அதை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். மேலும் கர்நாடகாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணியை பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சிகளில் ஓசூர் உதவி கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, முன்னாள் எம்.பி.க்கள் சுகவனம், வெற்றிச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செங்குட்டுவன், முருகன், சத்யா, அசோக் லேலண்டு நிறுவன சமூக பொறுப்புணர்வு பிரிவு தலைவர் பாலசந்தர், அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவ அலுவலர் பூபதி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பி.எஸ்.சீனிவாசன், மாவட்ட கவுன்சிலர்கள் ஷேக் ரஷீத், பாக்யராஜ், சூளகிரி ஒன்றிய கவுன்சிலர் வனிதா சீனிவாசன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் எல்லோராமணி, ஓசூர் மாநகர துணை செயலாளர் திம்மராஜ், பொருளாளர் சென்னீரப்பா, காவேரிப்பட்டணம் தொழில் அதிபர் கே.வி.எஸ்.சீனிவாசன், ஆனந்தய்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story