நகரத்தில் இருந்து கிராமத்தை நோக்கி மாணவர்கள் செல்லும் அவலநிலை


நகரத்தில் இருந்து கிராமத்தை நோக்கி மாணவர்கள் செல்லும் அவலநிலை
x
தினத்தந்தி 30 Aug 2021 10:54 PM IST (Updated: 30 Aug 2021 10:54 PM IST)
t-max-icont-min-icon

அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாததால் நகரத்தில் இருந்து கிராமத்தை நோக்கி மாணவர்கள் செல்லும் அவலநிலை ஏற்பட்டு உள்ளது.

ராமநாதபுரம், 
அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாததால் நகரத்தில் இருந்து கிராமத்தை நோக்கி மாணவர்கள் செல்லும் அவலநிலை ஏற்பட்டு உள்ளது.
உள்ளிருப்பு போராட்டம்
ராமநாதபுரத்தில் அரசு உயர்நிலை பள்ளியோ, மேல்நிலைப் பள்ளியோ இதுவரை தொடங்கப்படவில்லை. இதனால் ராமநாதபுரம் நகரில் உள்ள வள்ளல்பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் தங்களுக்கு அரசு இடஒதுக்கீட்டில் உயர்கல்வி கற்பதற்கு ஏற்ப அரசு பள்ளி வேண்டும் என்றும் தனியார் பள்ளிக்கு செல்லமாட்டோம் என்று கோரி கடந்த 2 மாதங்களுக்குமுன் மாற்றுச்சான்றிதழை வாங்காமல் பெற்றோருடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தங்கள் பள்ளியில் போதிய இடவசதி உள்ளதால் இந்த கல்வி ஆண்டு முதல் மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என கோரினர். இதனை தொடர்ந்து முதன்மை கல்வி அதிகாரி அங்கு வந்து பள்ளியை தரம் உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதுவரை அருகில் உள்ள சக்கரக்கோட்டை அரசு பள்ளியில் படிக்குமாறும் அப்போதுதான் பாடபுத்தகங்கள், சீருடைகள் கிடைக்கும் என்றும், இந்த பள்ளி ஓரிருமாதங்களில் தரம் உயர்ந்ததும் அனைவரையும் மாற்றி சேர்த்து கொள்வதாகவும் உறுதி அளித்தார். 
உறுதிமொழி
அவரின் உறுதிமொழியை ஏற்று போராட்டத்தை கைவிட்டு மாற்றுச்சான்றிதழ் வாங்கி சக்கரக்கோட்டை அரசு பள்ளியில் சேர்ந்தனர். அங்கு ஆங்கில வழி கல்வி இல்லாத நிலையில் இதற்கென தற்காலிகமாக ஆசிரியர்களை கொண்டு ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டது. தற்போது 2 மாதங்களுக்கு மேலாகியும் பள்ளிகள் மீண்டும் திறக்க உள்ள நிலையில் இதுவரை ராமநாதபுரத்தில் அரசு உயர்நிலைபள்ளியோ, மேல்நிலைப் பள்ளியோ தரம் உயர்த்தப்படவில்லை.
இதனால் மாணவர்கள் ராமநாதபுரம் அருகே 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சக்கரக்கோட்டை ஊராட்சி பள்ளிக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
 மேற்கண்ட பள்ளிக்கு செல்லும் வழியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு வருவதால் பஸ் உள்ளிட்ட போக்குவரத்து வசதி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் ஆட்டோக்கள் உள்ளிட்டவைகளில் ரூ.பல ஆயிரம் செலவழித்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
கோரிக்கை
சக்கரக்கோட்டை பள்ளியில் ஆங்கில வழிகல்வி புதிதாக உருவாக்கி கொடுத்த கல்வித்துறை அதிகாரிகள் வள்ளல்பாரி பள்ளியில் போதிய இடவசதி உள்ளதோடு மருத்துவ கல்விக்கு தயார்ப்படுத்தும் எலைட் பள்ளி நடந்துவரும் நிலையில் அந்த ஆசிரியர்களை கொண்டே இந்த பள்ளியிலேயே 9-ம் வகுப்பு பாடங்களை நடத்த நடவடிக்கை எடுக்கலாம் என்று பெற்றோர்கள் தங்களின் பொருளாதார நிலை மற்றும் பிள்ளைகளின் உயர்கல்வி எதிர்கால நிலையை கருத்தில் கொண்டு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story