கள்ளக்குறிச்சி விழுப்புரம் மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா


கள்ளக்குறிச்சி விழுப்புரம் மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா
x
தினத்தந்தி 30 Aug 2021 10:58 PM IST (Updated: 30 Aug 2021 10:58 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி விழுப்புரம் மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது

கள்ளக்குறிச்சி

கோவிந்தராஜ பெருமாள்

கள்ளக்குறிச்சியில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீதில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.  இதையொட்டி நேற்று காலை கிருஷ்ணருக்கு இளநீர், பால், தயிர், சந்தனம், தேன் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 
இதைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் கோவில் உள்புறப்பாடு நடைபெற்றது. இதில் சமூக இடைவெளியுடன் குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சங்கராபுரம்

அதேபோல் சங்கராபுரம் மணி நதிக்கரை அருகே உள்ள அலமேலு மங்கை சமேத வெங்கடேச பெருமாள் கோவிலில் உள்ள கிருஷ்ணருக்கு  சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக கிருஷ்ணருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் சங்கராபுரம் திரவுபதி அம்மன் கோவில் வளாகத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவும், எஸ்.வி. பாளையம் கிருஷ்ணர் கோவில் மற்றும் சங்கராபுரம் பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான புதுப்பட்டு, பிரம்மகுண்டம், பவுஞ்சிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
மூங்கில்துறைப்பட்டில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமணிந்து அழைத்து வந்தனர். தொடர்ந்து கிருஷ்ணர் பாடல் பாடி ஆராதனைகளில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணர் சிலைக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேல்மலையனூர்

இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோவில்களிலும் கிருஷ்ணர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அந்த வகையில், மேல்மலையனூர் அருகே வளத்தியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ணஜெயந்தி விழா நடைபெற்றது.
இதையொட்டி காலையில் ஸ்ரீகிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகமும், பலவித பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பிற்பகல் 12.30 மணிக்கு பாமா ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் முக்கிய வீதிகளில் வீதிஉலாவாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாட்டு நெறிமுறகைளை பின்பற்றி நடந்த விழாவில் பக்தர்கள் முககவசம் அணிந்து பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
விழுப்புரம் சங்கரமடத்தில் நடந்த கிருஷ்ணஜெயந்தி விழாவில் குழந்தைகள் பலர் கிருஷ்ணர் வேடமும், ராதை வேடமும் அணிந்து பங்கேற்றனர்.





Next Story