திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை பள்ளிகள் திறப்பு
9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நாளை (புதன்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் தூய்மை, கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை
9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நாளை (புதன்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் தூய்மை, கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் நாளை (புதன்கிழமை) 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 1,600 பள்ளிகள் உள்ளன. இதில் 545 பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை 1 லட்சத்து 27 ஆயிரத்து 741 மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்கள் சுழற்சி முறையில் ஒரு நாளைக்கு 50 சதவீத மாணவா்கள் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி மாவட்ட கல்வித் துறை மூலம் வகுப்பறையில் மாணவர்களை சமூக இடைவெளி பின்பற்றி அமர வைப்பது, வகுப்பு கால அட்டவணையை தயாரித்தல் உள்ளிட்ட முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதுமட்டுமின்றி திறக்கப்பட உள்ள பள்ளிகளை தூய்மை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் வகுப்பறையில் மேஜை உள்ளிட்ட பொருட்கள் மீது கிருமிநாசினி தெளிக்கும் பணியும் நடைபெறுகிறது.
தூய்மை பணி
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பள்ளிகள் திறக்கப்படும் போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது சுகாதாரத்துறை மூலம் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுவது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது. முக்கியமாக அனைத்து ஆசிரியர்களும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்துடன் இணைந்து பள்ளி வளாகத்தினை தூய்மைப்படுத்துதல், வகுப்பறைகளில் மேஜை உள்ளிட்ட பொருட்களில் கிருமி நாசினி தெளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது சுகாதாரத்துறை மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை முழுமையாக பரிசோதனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும் கல்வி நிறுவன வாகனங்களில் பணிபுரியும் டிரைவர், உதவியாளர் ஆகியோர் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story