ரூ.5 கோடியுடன் பிடிபட்ட கும்பலின் பின்னணி குறித்து தீவிர விசாரணை


ரூ.5 கோடியுடன் பிடிபட்ட கும்பலின் பின்னணி குறித்து தீவிர விசாரணை
x
தினத்தந்தி 30 Aug 2021 5:55 PM GMT (Updated: 30 Aug 2021 5:55 PM GMT)

காரைக்குடி பகுதியில் ரூ.5 கோடியுடன் பிடிபட்ட கும்பலின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

காரைக்குடி, 
காரைக்குடி பகுதியில் ரூ.5 கோடியுடன் பிடிபட்ட கும்பலின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
ரூ.5 கோடியுடன் சிக்கிய கும்பல்
சேலம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (வயது43), மணிகண்டன் (38),  சென்னையைச் சேர்ந்த சூர்யகிஷோர் (51), கோவையைச் சேர்ந்த சண்முக ஆனந்த் (46), மற்றும் குமார் (46), திருச்சி காமராஜ் (40) ஆகிய 6 பேர் 2 கார்களில் கோடிக்கணக்கில் பணத்துடன் வந்து, காரைக்குடி வடக்கு போலீசாரிடம் சிக்கினர். 
பின்னர் வருமான வரித்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, மகேசுவரி தலைமையிலான அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினார்கள். அந்த பணத்தை எண்ணும் பணி காரைக்குடி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. நள்ளிரவு 2 மணி வரை நடைபெற்ற இந்த பணியில் மொத்தம் ரூ.4 கோடியே 99 லட்சத்து 90 ஆயிரத்து 500 இருப்பது தெரியவந்தது. 
இதையடுத்து அந்த பணத்தை வருமான வரித்துறை அலுவலகத்திற்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர். மேலும் பணத்தை எடுத்து வந்த 6 பேரையும் அழைத்துச்சென்றனர். அவர்களிடம் மதுரை வருமானவரி இயக்குனர் ஸ்டாலின் தலைமையிலான அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
ஆவணம் இல்லை
இந்த பணத்தை காரைக்குடி பகுதியில் இடம் வாங்குவதற்காக கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் கொண்டு வந்த பணத்திற்கு எவ்வித ஆவணமும் இல்லை என தெரியவந்தது.  வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய கிடுக்கிப்பிடி விசார ணையின் போது, பணத்தை எடுத்து வந்து சிக்கிய நபர்களில் முக்கியமானவராக கருதப்படும் ராஜ்குமார் திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார். 
இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது அவர்கள், காரைக்குடி பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் ஒருவரை பற்றி தெரிவித்துள்ளனர். எனவே அவரை பிடிக்க காரைக்குடி வடக்கு போலீசார் சென்றபோது, அவர் தலைமறைவாகிவிட்டது தெரியவந்துள்ளது. 
விசாரணை
மேலும் இதுகுறித்து காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜ் தலைமையிலான போலீசார் பல்வேறு கோணத்தில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி பகுதியைச் சேர்ந்த 3 நபர்கள் தலைமறைவாக உள்ளனர். அவர்களது செல்போன்கள் அணைத்து வைக்கப் பட்டுள்ளது. அவர்களை போலீசார் பிடிக்க கண்காணித்து வருகின்றனர். மேலும் இந்த பணத்தை எங்கிருந்து கொண்டு வந்தனர்.  பணத்தை கொடுத்து அனுப்பியவர்கள் யார்? என்று  வருமான வரித்துறை அதிகாரிகள்  கோவை, திருச்சி, சேலம், சென்னை ஆகிய பகுதிகளில் உள்ள அலுவலகங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட செல் போன்களில் உள்ள எண்களை வைத்தும் விசாரணை நடந்து வருகிறது.

Next Story