ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பயிற்சி டாக்டரின் கதி என்ன?


ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பயிற்சி டாக்டரின் கதி என்ன?
x
தினத்தந்தி 30 Aug 2021 11:27 PM IST (Updated: 30 Aug 2021 11:27 PM IST)
t-max-icont-min-icon

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பயிற்சி டாக்டரின் கதி என்ன?

வால்பாறை

வால்பாறைக்கு சுற்றுலா வந்தபோது சேடல்டேம் ஆற்றில் குளித்த பயிற்சி டாக்டர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பயிற்சி டாக்டர்கள்

கோவையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வரும் சென்னை தெற்கு மாம்பலத்தை சேர்ந்த ஸ்ரீராம் (வயது 25) உள்பட 5 பயிற்சி டாக்டர்கள் நேற்று வால்பாறைக்கு சுற்றுலா வந்தனர்.

 இவர்கள் வால்பாறை பகுதியில் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்துவிட்டு, வால்பாறையில் இருந்து சோலையார் அணையை சுற்றி பார்க்க சென்றனர்.  இந்த நிலையில் சோலையார் அணை முழு கொள்ளளவை எட்டியதால் சேடல்டேம் பகுதியில் அணையில் இருந்து தானாக தண்ணீர் வெளியேறி 2 சேடல் பாதைகளில் செல்கிறது. 

இந்த சேடல் பாதையில் தண்ணீர் அருவிகளாக கொட்டி, ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த அழகிய காட்சியை கண்ட பயிற்சி டாக்டர்கள் அங்கு குளிக்க முடிவு செய்தனர்.

ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்

பின்னர் அவர்கள் ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். அப்போது பயிற்சி டாக்டர் ஸ்ரீராம் திடீரென தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அவரை அவரது நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் வெளியேறியதால், அதற்குள் அவர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார். 

இதனைக்கண்ட சேடல்டேம் குடியிருப்பு பகுதி மக்கள் ஆற்றின் கரையோரத்தில் தேடினர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

தேடும் பணி தீவிரம்

இதற்கிடையில் சம்பவம் குறித்து தகவல் அறிந்த வால்பாறை தீயணைப்பு படையினர், சேக்கல்முடி போலீசார் விரைந்து வந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பயிற்சி டாக்டரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் இருள் சூழ தொடங்கியது. 

இதனால் தேடும் பணியை தீயணைப்பு படையினர் கைவிட்டனர். மீண்டும் இன்று (செவ்வாய்க்கிழமை) தேடும் பணி நடைபெறும் என்று தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். இந்த சேடல்டேம் வழியாக ஆற்று தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு செல்கிறது. 

இந்த வழி மானாம்பள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்டது. இதனால் வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். 

சோகம்

இதற்கிடையில், பயிற்சி டாக்டருடன் வந்த சக நண்பர்கள் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.

வால்பாறைக்கு சுற்றுலா வந்த இடத்தில் பயிற்சி டாக்டர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story