மாவட்டங்களில் தயார் நிலையில் 324 பள்ளிகள்


மாவட்டங்களில் தயார் நிலையில் 324 பள்ளிகள்
x
தினத்தந்தி 31 Aug 2021 12:58 AM IST (Updated: 31 Aug 2021 12:58 AM IST)
t-max-icont-min-icon

நாளை திறக்கப்படவுள்ளதால் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள 324 பள்ளிகளும் தயார் நிலையில் உள்ளன.

பெரம்பலூர்:

9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு...
கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவின்படி 9, 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு நாளை (புதன்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இதையொட்டி அந்த வகுப்புகளை கொண்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என பெரம்பலூர் மாவட்டத்தில் 144 பள்ளிகளும், அரியலூர் மாவட்டத்தில் 180 பள்ளிகளும் திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளன. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 144 பள்ளிகளில் 9, 10, 11, 12-ம் வகுப்புகளில் 32,099 மாணவ-மாணவிகளும், அரியலூர் மாவட்டத்தில் 180 பள்ளிகளில் 39,841 மாணவ-மாணவிகளும் கல்வி பயில உள்ளனர்.
அந்த பள்ளிகளில் அரசு அறிவித்திருந்த கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வகுப்பறைகளில் சீரமைப்பு பணிகளும், தண்ணீர் ஊற்றி கழுவும் பணிகளும், கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும், பள்ளி வளாகங்களில் தூய்மைப்படுத்தும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று முடிந்தன. மேலும் பள்ளி வளாகங்களில் மாணவ-மாணவிகள் கைகளை அடிக்கடி கழுவுவதற்கு சோப்பு, கிருமி நாசினி மற்றும் தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒப்புதல் கடிதம்
மாணவ- மாணவிகளின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க தெர்மல் ஸ்கேனர் கருவியும் வைக்கப்பட்டுள்ளது. வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகளை மாணவ-மாணவிகளுக்கு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் வகுப்பறையில் மாணவ-மாணவிகள் கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வைக்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்தபடி ஒரு வகுப்பறைக்கு 20 மாணவ-மாணவிகள் அமரும் விதமாக இருக்கைகள் போடப்பட்டுள்ளது. வகுப்பறைக்கு சமூக இடைவெளி விட்டு செல்வதற்காக வட்டம் போடப்பட்டுள்ளது.
பள்ளிக்கு வருகை தரும் அனைத்து மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் கட்டாயமாக முககவசம் அணிந்து வர வேண்டும் என்றும், மாணவ-மாணவிகள் பெற்றோரிடம் பள்ளிக்கு செல்வதற்கு ஒப்புதல் கடிதம் பெற்று வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கு வருகை தரும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். பள்ளியில் அனைவரும் அரசு தெரிவித்துள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Next Story