கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்


கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்
x
தினத்தந்தி 31 Aug 2021 12:58 AM IST (Updated: 31 Aug 2021 12:58 AM IST)
t-max-icont-min-icon

கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம் கொண்டாடப்பட்டது.

பெரம்பலூர்:

சிறப்பு அலங்காரம்
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு பெரம்பலூரில் பிரசித்தி பெற்ற மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் உள்ள நவநீத கிருஷ்ணருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கிருஷ்ணரை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.
இதையடுத்து இரவு 7 மணியளவில் பெரம்பலூர் எடத்தெருவில் உள்ள ராஜகோபால சுவாமி பஜனை மடத்தில் சிறப்பு பூஜையும், சந்தான கிருஷ்ணன் தொட்டில் சேவையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து வந்து கிருஷ்ணரை வழிபட்டனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இன்று வீதி உலா
இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும் வீடுகளில் கண்ணன் குழந்தையாக தங்கள் வீட்டிற்கு வருவது போன்று கால்தடங்களை வீட்டின் வாசலில் இருந்து பூஜையறை வரை பதித்தும், கிருஷ்ணருக்கு பிடித்த உணவு பொருட்களை செய்தும், கிருஷ்ணரின் சிலைகளை அலங்கரித்தும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை மதனகோபாலசுவாமி, மரகதவல்லித்தாயார் உற்சவ சிலைகள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பல்லக்கில் வைத்து கோவில் உள்பிரகாரத்தில் திருவீதி உலாவாக எடுத்து வரப்படுகிறது. மாலை 5 மணியளவில் மதனகோபாலசுவாமி கோவில் நான்கு கால் மண்டபம் அருகே கோவில் திட்டப்படி உறியடி நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினருடன் இணைந்து யாதவர் சங்கத்தினர் செய்துள்ளனர்.
உறியடி திருவிழா
மங்களமேட்டை அடுத்துள்ள பெருமத்தூர் கிராமத்தில் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி திருவிழா மற்றும் கழுமரம் ஏறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக நவநீதகிருஷ்ணர் சிலைக்கு பால், பன்னீர், சந்தனம், தயிர், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான மூலிகை பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நவநீதகிருஷ்ணர் மற்றும் தாயாருக்கு சிறப்பு பூஜை நடந்தது. மாலை 5 மணி அளவில் நவநீத கிருஷ்ணர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உறியடி விழா பந்தலுக்கு கொண்டு வரப்பட்டார்.
உறியடி நடைபெற்ற பந்தலில் சீடை, ரொக்கப்பணம், வெள்ளிக்காசுகள், பூக்கள் ஆகிய பொருட்களை கொண்டு மூட்டை கட்டி வைத்திருந்தனர். இந்த மூட்டையை அடித்து வெற்றி பெற்றவர்கள் மேற்கண்ட பொருட்களை பரிசாகப் பெற்றனர். பின்னர் கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பெருமத்தூர், பெருமத்தூர் நல்லூர், மிளகா நத்தம் கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

Next Story