பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு


பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு
x
தினத்தந்தி 30 Aug 2021 7:35 PM GMT (Updated: 2021-08-31T01:05:45+05:30)

கீரனூர் அருகே பழமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது

புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, தென்னதிரையன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மரிங்கிப்பட்டி கிராமத்தில் சுப்ரமணியன் என்பவருடைய விவசாய நிலத்தில் கி.பி 14-ம் நூற்றாண்டை சேர்ந்த ஆசிரியம் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கீரனூரைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர்களான முருகபிரசாத், நாராயணமூர்த்தி, ராகுல் பிரசாத் ஆகியோர் கூறியதாவது
இந்த ஆசிரியம் கல்வெட்டானது நீளமான கல் வெட்டிலன் 8 வரிகளில் எழுதப்பட்டுள்ளது. கல்வெட்டின் அடிப்புறத்தில் நிலத்தில் ஊன்றி வைக்கும் வண்ணம் இருபுறமும் காடி போன்ற வடிவமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
கி.பி 13-ம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ்நாட்டில் பாண்டிய பேரரசின் வீழ்ச்சிக்கு பின் உள்ளூர் நில உடைமையாளர்கள் தங்கள் பகுதியின் ஆட்சியாளர்களாக செயல்பட்டு வந்துள்ளனர். அவர்களின் நிலங்கள் மற்றும் உடைமைகளுக்கு பாதுகாப்பு அளித்தவர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள், காவல் அதிகாரம், காவல் எல்லைகள் போன்ற தகவல்கள் இது போன்ற ஆசிரியம் கல்வெட்டுகள் வழியாக நமக்கு கிடைக்கப் பெறுகின்றன. ஆசிரியம் என்பதற்கு பாதுகாப்பு தருதல், அடைக்கலம் தருதல் என்று பொருள்.
 அவ்வகையில் இந்த கல்வெட்டானது ஆலங்குடி வீதிவிடங்க பொருளமையார் காவலில் உள்ள இடம் என குறிக்கும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 65-க்கும் மேற்பட்ட ஆசிரியம் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் அதிகமான கல்வெட்டுகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் கிடைக்கப் பெற்றுள்ளன.
உத்தமநாதசாமி கோவில்
 கீரனூர் முதல் கோவில்வீரக்குடி வரை அக்னி ஆற்றின் வடக்கு கரையில் இருந்த ஊர்களை உள்ளடக்கிய நிலப்பிரிவு வடசிறுவாயில்நாடு என்று சோழர்காலம் முதலே அழைக்கப்பட்டு வந்துள்ளது என்பதை கீரனூர் உத்தமநாதசாமி கோவிலில் கல்வெட்டுகள் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.  அதனை உறுதி செய்யும் வண்ணம் கீரனூருக்கு அருகே கிடைத்துள்ள இந்த ஆசிரியம் கல்வெட்டிலும் வடசிறுவாயில்நாட்டு கீழை இரைங்குடி என எழுதப்பட்டுள்ளது. மேலும் இக்கல்வெட்டின் எழுத்து அமைதியை கொண்டு இது 14-ம் நூற்றாண்டின் பிற்பகுதியை சார்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story