வங்கி மேலாளர் வீட்டில் 34 பவுன் நகை கொள்ளை


வங்கி மேலாளர் வீட்டில் 34 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 30 Aug 2021 8:03 PM GMT (Updated: 30 Aug 2021 8:03 PM GMT)

நெல்லையில் வங்கி மேலாளர் வீட்டில் 34 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

நெல்லை:
நெல்லையில் வங்கி மேலாளர் வீட்டில் 34 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வங்கி மேலாளர்

நெல்லை பாளையங்கோட்டை மகாராஜநகர் ஐ.ஓ.பி. காலனி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 34). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 27-ந் தேதி பாஸ்கர் தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்றுவிட்டார். வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள், கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த பொருட்கள் மற்றும் துணிகளை வெளியே எடுத்து வீசினர். மேலும், லாக்கரை உடைத்து அதில் இருந்த தங்க நகையை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

34 பவுன் நகைகள்

இந்த நிலையில் பாஸ்கர் நேற்று வீட்டிற்கு வந்தார். கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 34 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு திடுக்கிட்டார். 
இதுகுறித்து உடனடியாக பாஸ்கர் பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். நெல்லை மாநகர குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார், பாளையங்கோட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாம்சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். கொள்ளைபோன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து மெயின் ரோடு வரை சென்று திரும்பி வந்தது. யாரையும் கவ்விபிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் வந்து ரேகைகளை பதிவு செய்தனர்.

போலீஸ் வலைவீச்சு

மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார். இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். நெல்லையில் வங்கி மேலாளர் வீட்டில் 34 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது.

Next Story