கர்நாடகத்தில் டிசம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தகவல்
கர்நாடகத்தில் 4 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும், டிசம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுவிடும் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.
பெங்களூரு:
கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கொரோனா தடுப்பூசி
கர்நாடகத்தில் கடந்த 27-ந் தேதியுடன் 4 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வருகிற டிசம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் 2 டோஸ் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்துள்ளோம். கிராமங்களில் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள இன்னும் தயக்கம் காட்டுகிறார்கள். அதனால் கலபுரகி, யாதகிரியில் தடுப்பூசி செலுத்துவது குறைந்துள்ளது.
குடிசை வாழ் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட சிறப்பு முகாம் நடத்தப்படும். கேரள மாநிலத்தை ஒட்டி கர்நாடக எல்லையில் 20 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும். குழந்தைகளுக்கு வழங்க அனுமதி கிடைத்ததும், அவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும். கேரளாவில் தினமும் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
முகக்கவசம் அணிய வேண்டும்
ஆனால் கர்நாடகத்தில் வைரஸ் பரவல் கட்டுக்குள் தான் உள்ளது. பெங்களூரு மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகளால் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. கேரளா உள்பட சில மாநிலங்களில் கொரோனா 3-வது அலை தொடங்கியுள்ளது.
நமது மாநிலத்தில் அத்தகைய நிலை வரக்கூடாது. அதனால் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே கொரோனா பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு சுதாகர் கூறினார்.
Related Tags :
Next Story