கேரளாவில் இருந்து கர்நாடகம் வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்
கேரளாவில் இருந்து கர்நாடகம் வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் உறுதி என்று தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டர் ராஜேந்திரா உறுதியாக கூறியுள்ளார்.
மங்களூரு:
அடங்க மறுக்கும் கொரோனா
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும், கடவுளின் தேசமான கேரளாவில் மட்டும் அடங்க மறுக்கிறது. அங்கு தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் அந்த மாநில அரசு திணறி வருகிறது. இதனால் கேரளாவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
மேலும், கேரளாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் பரவி வருவதால், அங்கிருந்து வருபவர்களுக்கு அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகம் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி, கேரளாவில் இருந்து வருபவர்கள் கட்டாயம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று கர்நாடக, தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா நெகட்டிவ் கட்டாயம்
இந்த நிலையில் மாநிலங்கள் இடையே பயணம் செய்ய கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால், கேரளாவில் இருந்து கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு வந்து செல்பவர்கள் மிகழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், கர்நாடக அரசு கேரளாவில் இருந்து வருபவர்கள் கட்டாயம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று உறுதிப்பட கூறியுள்ளது.
இதனை கேரள மாநில எல்லையில் உள்ள கர்நாடக மாவட்டமான தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டர் ராஜேந்திராவும் உறுதிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மத்திய அரசு மாநிலங்கள் இடையே பயணிக்க கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமில்லை என்று தெரிவித்துள்ளது. இது கேரளாவில் இருந்து கர்நாடகம் வருபவர்களுக்கு பொருந்தாது. கேரளாவில் இருந்து வருபவர்கள் கட்டாயம் 72 மணி நேரத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். கேரள எல்லையில் உள்ள தட்சிண கன்னடாவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டால், நிச்சயம் இங்கும் கொரோனா பரவல் அதிகரித்து விடும்.
பதிப்பு விகிதம் குறைவு
இதனால் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதை தவிர வேறு வழி இல்லை. இன்றைய (நேற்றைய) நிலவரப்படி தட்சிண கன்னடா மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் 2 சதவீதத்திற்குள் வந்துள்ளது. அதாவது, கொரோனா பாதிப்பு விகிதம் 1.82 சதவீதமாக குறைந்துள்ளது என்றார்.
Related Tags :
Next Story