போலீஸ் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கை முழுமையாக தமிழில் பதிவு செய்ய கோரிக்கை
போலீஸ் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கை முழுமையாக தமிழில் பதிவு செய்ய போலீஸ் டி.ஜி.பி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
உத்தரவு
தமிழக அரசு கடந்த 1970-ம் ஆண்டே அனைத்து அரசு அலுவலகங்களிலும் அலுவலக நடைமுறைகள் தமிழில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசின் தமிழ் வளர்ச்சித்துறை அனைத்து அரசுத்துறைகளுக்கும் அலுவலக நடைமுறைகள் தமிழில் இருக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தற்போதுள்ள நிலையில் மாவட்ட அரசுத்துறை அலுவலகங்களில் அரசு உத்தரவுகள் தமிழில் வெளியிடப்படுகிறது. ஆனாலும் மாநில அளவிலான உத்தரவுகள் 90 சதவீதம் ஆங்கிலத்திலேயே வெளியிடப்பட்டு வருகிறது.
முதல் தகவல் அறிக்கை
இந்த நிலையில் போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கை முழுமையாக தமிழில் பதிவு செய்யப்படுவதில்லை. பெரும்பாலான நிகழ்வுகளில் முதல் தகவல் அறிக்கை 60 சதவீதம் ஆங்கிலத்திலும் 40 சதவிகிதம் தமிழிலும் உள்ளவாறு பதிவு செய்யப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் முழுமையாகவே ஆங்கிலத்தில் பதிவு செய்யப்படுகிறது. கிராமப்புற போலீஸ் நிலையங்களிலும் இதே நிலை நீடிக்கிறது.
ஆகையால் புகார் கொடுத்தவருக்கு முதல் தகவல் அறிக்கையில் உள்ள விஷயங்கள் முழுமையாக புரிவதில்லை. புகார்தாரர், இறந்தவர், காயம் பட்டவர், வழக்கு பதிவு செய்யப்பட்ட சட்டப்பிரிவு, கைது செய்யப்பட்ட விவரம் ஆகியவை கூட ஆங்கிலத்தில் பதிவு செய்யப்படுகிறது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டாரா? இல்லையா? என்பதும் ஆங்கிலத்திலேயே பதிவு செய்யப்படுகிறது. இந்த குழப்ப நிலை ஏன் என்று தெரியவில்லை.
கோரிக்கை
தற்போது உயர்நீதிமன்றத்திலேயே தமிழ்வழக்கு மொழி ஆக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் அரசு உத்தரவிட்டும் போலீஸ் நிலையங்களில் இன்னும் முதல் தகவல் அறிக்கை முழுமையாக தமிழில் பதிவு செய்யப்படாத நிலையில் நீடிப்பது ஏற்புடையதல்ல. அதிலும் புகார் மனுதாரருக்கு புரியும் வகையில் முதல் தகவல் அறிக்கை முழுமையாக தமிழில் பதிவு செய்யப்பட வேண்டியது அவசியமாகும். எனவே மாநில அளவில் தமிழில் ஆர்வமுள்ள தற்போதைய போலீஸ் டி.ஜி.பி. இதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு முன்னோடியாக அனைத்து போலீஸ் நிலையங்களிலும் முதல் தகவல் அறிக்கை முழுமையாக தமிழில் பதிவு செய்ய உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story