தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த அய்யா வைகுண்டர்
ஆவணி திருவிழாவையொட்டி சாமிதோப்பு தலைமைப்பதியில் அய்யா வைகுண்டர் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தென்தாமரைகுளம்:
ஆவணி திருவிழாவையொட்டி சாமிதோப்பு தலைமைப்பதியில் அய்யா வைகுண்டர் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தலைமைப்பதி
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்றது.
கொரோனா தொற்றின் காரணமாக தமிழக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி பணிவிடை மற்றும் வாகன பவனி ஆகிய நிகழ்ச்சிகளில் குறைவான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேரோட்ட நிகழ்ச்சி
ஆவணி திருவிழாவின் 11-ம் நாளன்று தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த வருடம், மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் அறிவுரையின்படி நேற்று தேர் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறவில்லை.
அதாவது காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், காலை 11 மணிக்கு அய்யா வைகுண்டசாமி தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நண்பகல் 12 மணிக்கு பல்லக்கு வாகனத்தில் தலைமைப்பதியில் இருந்து அய்யா வைகுண்டசாமி அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேருக்கு எழுந்தருளினார்.
சுருள் வைத்து வழிபாடு
ஆனால் தேர் அதே இடத்திலேயே நின்றது. அங்கேயே காவிஉடை அணிந்து, தலைப்பாகை அணிந்த அய்யா வழி பக்தர்கள் சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று அய்யாவுக்கு பன்னீர், பழம், வெற்றிலை, பாக்கு, பூ ஆகிய பொருட்களை சுருளாக படைத்து வழிபட்டனர். அவர்களுக்கு அய்யா வைகுண்டசாமி ஆசி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பால.ஜனாதிபதி தலைமை தாங்கினார். ராஜவேல், பால.லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நண்பகல் முதல் மாலை 6 மணி வரை பக்தர்களின் சுருள் ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 9 மணிக்கு அய்யா ரிஷப வாகனத்தில் வீதியில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேரோட்ட நாளன்று பணிவிடைகளை ஜனா.யுகேந்த், ஜனா.வைகுந்த், பையன் நேம்ரிஸ் ஆகியோர் செய்திருந்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
விழாவுக்கான பாதுகாப்பு பணியில் கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், தென்தாமரைகுளம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் ஈடுபட்டனர். முன்னதாக தலைமைப்பதிக்கு வரும் பாதைகளில் பேரிகார்டுகள் வைத்து வாகனங்கள் எதுவும் செல்லாத வகையில் அடைத்திருந்தனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், தொடர்ந்து கொடியிறக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story