மைசூரு மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் கைதான 5 பேரையும் சம்பவ இடத்துக்கு அழைத்து சென்று விசாரணை


மைசூரு மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் கைதான 5 பேரையும் சம்பவ இடத்துக்கு அழைத்து சென்று விசாரணை
x
தினத்தந்தி 31 Aug 2021 2:41 AM IST (Updated: 31 Aug 2021 2:41 AM IST)
t-max-icont-min-icon

மைசூரு மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் கைதான 5 பேரையும் சம்பவ இடத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

மைசூரு:

கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்

  மைசூரு அருகே சாமுண்டிமலை அடிவாரத்தில் லலிதாதிரிபுரா பகுதி உள்ளது. மராட்டியத்தை சேர்ந்த இளம்பெண் மைசூருவில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கடந்த 26-ந்தேதி தனது காதலனுடன் லலிதாதிரிபுரா பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 6-க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல், அவர்களை தடுத்து நிறுத்தி ரூ.4 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

  அவர்கள் பணம் கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் காதலனை தாக்கிய மர்மநபர்கள், கல்லூரி மாணவியை அருகில் இருந்த புதருக்குள் தூக்கிச் சென்று கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு தப்பி இருந்தனர்.

10 நாட்கள் போலீஸ் காவல்

  இதுதொடர்பாக ஆலனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த சிறுவன் உள்பட 5 பேரை கைது செய்துள்ளனர்.

  அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் 10 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் தெரியவந்துள்ளது.

அதிர்ச்சி தகவல்

  அதாவது, கைதானவர்கள் அனைவரும் வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர். குறிப்பாக அவர்கள் காதல் ஜோடிகளை குறிவைத்து கைவரிசை காட்டி வந்துள்ளனர். அதாவது ஒதுக்குப்புறமான இடத்தில் அமர்ந்து பேசும் காதல் ஜோடி, கணவன்-மனைவி என யாராக இருந்தாலும் அவர்களை கைதானவர்கள் மிரட்டி பணம் பறிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

  மேலும் வயது வித்தியாசம் இல்லாமல் பல பெண்களுக்கு அவர்கள் பாலியல் தொல்லையும் கொடுத்து இருப்பதும் தெரியவந்துள்ளது. ஆனால் பெரும்பாலானோர் தங்களது பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் இதுபற்றி போலீசில் புகார் கொடுக்காமல் இருந்துள்ளனர்.

  இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட 5 பேரும் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கைதானவர்களில் ஒருவர் எப்போதும் தனது பாக்கெட்டில் ஆணுறையுடன் சுற்றித்திரிந்ததும் தெரியவந்துள்ளது. மற்றவர்கள் வழிப்பறியில் ஈடுபடுவதில் ஆர்வமாக இருந்தாலும், அந்த ஒரு நபர் மட்டும் வயது வித்தியாசம் பார்க்காமல் பெண்களை பாலியல் தொல்லை செய்வதில் ஈடுபட்டு வந்த அதிர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளது.

நடித்து காட்டினர்

  இதைத்தொடர்ந்து கைதான 5 பேரையும் நேற்று போலீசார் சம்பவம் நடந்த சாமுண்டி மலை அடிவாரத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் 5 பேரும் கல்லூரி மாணவி மற்றும் அவருடைய காதலனை மிரட்டியதையும், தாக்கியதையும் போலீசார் முன்னிலையில் நடித்து காட்டினார்கள்.

  தொடர்ந்து 5 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story