அடுத்தடுத்து 4 கடை, குடோன்களில் கொள்ளை முயற்சி


அடுத்தடுத்து 4 கடை, குடோன்களில் கொள்ளை முயற்சி
x
தினத்தந்தி 31 Aug 2021 2:45 AM IST (Updated: 31 Aug 2021 2:45 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டத்தில் அடுத்தடுத்து 4 கடை, குடோன்களில் கொள்ளை முயற்சி நடந்தது. இதில் தொடர்புடையவரை பிடிக்க கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குழித்துறை:
மார்த்தாண்டத்தில் அடுத்தடுத்து 4 கடை, குடோன்களில் கொள்ளை முயற்சி நடந்தது. இதில் தொடர்புடையவரை பிடிக்க கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
கொள்ளை முயற்சி
மார்த்தாண்டம் அருகே உள்ள நட்டாலம் கீழ் விளையை சேர்ந்தவர் கருணாநிதி (வயது 52). இவர் மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ. வணிக வளாகத்தில் கைக்ெகடிகாரம் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு 10 மணிக்கு கடையையும், 2-வது மாடியில் உள்ள குடோனையும் பூட்டி விட்டு சென்றார்.
இந்தநிலையில் நேற்று காலையில் கருணாநிதி  கடையை திறந்து வைத்து விட்டு, குடோனுக்கு பொருள் எடுக்க சென்றார். அப்போது குடோன் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பொருட்கள் சிதறி கிடந்தன. பூட்டை யாரோ உடைத்து கொள்ளையடிப்பதற்காக உள்ளே புகுந்துள்ளனர். ஆனால் எதிர்பார்த்த பணமோ, விலை உயர்ந்த பொருளோ கிடைக்காததால், பொருட்கள் எதையும் எடுத்து செல்லவில்லை என்பது தெரிய வந்தது. 
போலீசார் விசாரணை
மேலும் அதே வரிசையில் உள்ள சரவணகுமார் என்பவரின் எலக்ட்ரானிக்ஸ் கடையின் குடோன் பூட்டும், சுனில் என்பவரின் கம்ப்யூட்டர் கடை பூட்டும், பென்சிகர் என்பவரின் எலக்ட்ரானிக்ஸ் கடை பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. ஆனால் அங்கும் பொருட்கள் எதுவும் கொள்ளை போகவில்லை. கொள்ளையன் அதிகாலையில் வந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே கொள்ளையன் அடுத்தடுத்து 4 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது. 
இந்த சம்பவம் குறித்து கருணாநிதி கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் கிறிஸ்துராஜ் வழக்குப்பதிவு செய்தார். மேலும் அங்கு கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது அதில் குறுந்தாடி வைத்த வாலிபர் ஒரு நீளமான கம்பியின் உதவியுடன் குடோனில் ஷட்டரை திறக்க முயற்சிப்பது பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி, கண்காணிப்பு கேமராவில் பதிவான ஆசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story