ஆதிதிராவிடர், பழங்குடியினர் மீதான தாக்குதல்: நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்- பசவராஜ் பொம்மை உத்தரவு
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மீதான தாக்குதல் குறித்த நிலுவை வழக்குகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு:
காலதாமதம் செய்யக்கூடாது
கர்நாடக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான தாக்குதல்கள் தொடர்பான மாநில அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் அதன் தலைவர் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில், பசவராஜ் பொம்மை பேசியதாவது:-
கர்நாடகத்தில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் மக்கள் மீதான வன்முறைகள் தொடர்பான வழக்குகளின் விசாரணையை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக நலத்துறை முதன்மை செயலாளர், போலீஸ், சட்டத்துறையுடன் இணைந்து, ஆதிதிராவிடர்கள் மீதான தாக்குதல் குறித்த வழக்கு விசாரணையில் குற்றபத்திரிகையை விரைவாக தாக்கல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் அதிகாரிகள் காலதாமதம் செய்யக்கூடாது. மேலும் அந்த மக்கள் மீதான தாக்குதல் குறித்த நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க வேண்டும். இதில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.
சாட்சிகளுக்கு பாதுகாப்பு
குற்றங்களை நிரூபிக்கும் அளவை அதிகரிக்க வேண்டும். இதற்காக வழக்குகளை சரியான முறையில் நடத்த வேண்டும். சமூக நலத்துறை முதன்மை செயலாளர் மாதந்தோறும் ஆலோசனை கூட்டங்களை நடத்தி, அரசின் முடிவுகளை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவசர நேரத்தில் 3 மாதங்களுக்கு ஒரு முறை இந்த கண்காணிப்பு குழு கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்படும்.
அதே நேரத்தில் மாவட்ட கலெக்டர்கள் 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆலோசனை நடத்தி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீது நடைபெறும் தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அமல்படுத்தியது தொடர்பாக ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தாக்குதல் வழக்குகளில் புகார்தாரர்கள் மற்றும் சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
அரசு வேலை
மேலும் இந்த வழக்குகளை மேற்பார்வையிட கூடுதல் அட்வகேட் ஜெனரலை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வனப்பகுதியில் வசிக்கும் ஆதிவாசி மக்கள் 1.80 லட்சம் பேர் தங்களை வெளியேற்ற கூடாது என்று கோரி மனு வழங்கினர். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மேல்முறையீடு செய்ய வசதியாக மாநில அளவில் ஆய்வு குழு அமைக்கப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பெயரில் போலி சாதி சான்றிதழ் பெறுவோர் மற்றும் அந்த சான்றிதழை வழங்குவோர் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த மக்களுக்கு கிடைக்கும் பயன்களை வேறு சாதியினர் பயன்படுத்த அனுமதிக்கவே கூடாது. தாக்குதலில் உயிரிழந்தவரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க 2 ஆண்டுகள் காலஅவகாசம் வழங்கப்படுகிறது.
மின் இணைப்பு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் குழந்தைகளுக்கு கல்வி அளிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும். அந்த மக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்களை அவர்களை போய் சேருவதை உறுதி செய்ய வேண்டும். கங்கா கல்யாண் திட்டத்தில் மின் மோட்டார்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். சட்டப்படி அந்த சமூகங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அவர்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
கூட்டத்தில் சமூக நலத்துறை மந்திரி கோட்டா சீனிவாசபூஜாரி, போக்குவரத்து துறை மந்திரி ஸ்ரீராமுலு, சட்டத்துறைமந்திரி மாதுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story