கட்சியை விட்டு விலக நினைப்பவர்கள் வெளியேறலாம்- குமாரசாமி
ஜனதா தளம் (எஸ்) கட்சி திறந்தவீடு என்றும், எங்கள் கட்சியை விட்டு விலக நினைப்பவர்கள் வெளியேறலாம் என்று குமாரசாமி கூறியுள்ளார்.
கலபுரகி:
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கலபுரகியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
20 வார்டுகளில் வெற்றி
ஜி.டி.தேவேகவுடா காங்கிரசில் சேருவதாக கூறியள்ளார். அதுபற்றி நான் கருத்து கூற மாட்டேன். பிற கட்சி தலைவர்களை எங்கள் கட்சியில் சேர்க்க அவர்களின் வீட்டு வாசலில் நாங்கள் நிற்கவில்லை. காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் தான் இந்த வேலையை செய்கின்றன. நாங்கள் தொண்டர்களை நம்பி கட்சி நடத்துகிறோம். ஜனதா தளம் (எஸ்) கட்சி திறந்த வீட்டை போன்றது. கட்சியை விட்டு விலகுபவர்கள் வெளியே போகலாம், வர நினைப்பவர்கள் உள்ளே வரலாம். கலபுரகி மாநகராட்சி தேர்தலில் 20 வார்டுகளில் எங்கள் கட்சி வெற்றி பெறும்.
உப்பள்ளி-தார்வார் மாநகராட்சியிலும் எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். இந்த மாநகராட்சியில் தொங்கு நிலை ஏற்பட்டால் எந்த கட்சியுடன் கூட்டணி வைத்து கொள்வது என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். எங்கள் கட்சி தொண்டர்கள் சரி இல்லை என்று நான் கூறவில்லை. நான் கூறிய கருத்தை ஊடகங்கள் திரித்து கூறிவிட்டன.
தொண்டர்களால் தான் கட்சி
நான் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சென்ற பிறகு தொண்டர்கள் சரியாக பணியாற்றுவது இல்லை என்று நிர்வாகிகள் என்னிடம் கூறினர். அதை தான் நான் கூறினேன். தொண்டர்களால் தான் எங்கள் கட்சி இருக்கிறது. அவ்வாறு இருக்கையில் தொண்டர்களை குறை கூறுவேனா?. மைசூரு மாணவி பலாத்கார வழக்கில் போலீசார் சரியாக செயல்படவில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
Related Tags :
Next Story