கர்நாடகம் வரும் கேரள பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு; முதல்-மந்திரி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
கேரளாவில் இருந்து கர்நாடகம் வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது கேரளாவில் இருந்து வருபவர்கள் ஒருவாரம் தனிமையில் இருக்க வேண்டும். முதல்-மந்திரி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
பள்ளிகள் திறப்பு
கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. படிப்படியாக கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த ஜூலை 26-ந்தேதி திறக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் கடந்த 23-ந் ேததி திறக்கப்பட்டது. பள்ளிகளுக்கு வர மாணவர்கள் ஆர்வமாக வருகிறார்கள். இதையடுத்து 6 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது.
இதில் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ், சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 6 முதல்-8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கொரோனா தடுப்பு விதிமுறைகள்
கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை கட்டுக்குள் வந்துவிட்டது. அதன் காரணமாக 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் கடந்த 23-ந் தேதி திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மேலும் சில வகுப்புகளை திறப்பது குறித்து ஆலோசிக்க முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் மந்திரிகள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவினரும் கலந்து கொண்டனர். மருத்துவ நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி கர்நாடகத்தில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை வருகிற 6-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் திறப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
கொரோனா பாதிப்பு 2 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள தாலுகாக்களில் மட்டுமே பள்ளிகளை திறக்க வேண்டும். வகுப்புகளில் 50 சதவீத குழந்தைகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் சுழற்சி முறையில் குழந்தைகளுக்கு வகுப்புகளை நடத்த வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பள்ளிகளை திறக்க வேண்டும். சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்களில் விடுமுறை விடவேண்டும். இந்த நாட்களில் வகுப்புகளை கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும்.
விநாயகர் சிலைகள்
அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா 3-வது அலை அதிகமாக பரவி வருகிறது. இந்த சூழ்நிலையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருகிறது. இந்த பண்டிகையை பொது இடங்களில் கொண்டாட அனுமதி வழங்குவது குறித்து வருகிற 5-ந் தேதி முதல்-மந்திரி ஆலோசித்து முடிவு எடுப்பார். சில நிபந்தனைகளுடன் விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி வழங்கப்படலாம்.
மராட்டியம், கேரளாவை ஒட்டியுள்ள எல்லை மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. அதனால் குடகு, தட்சிண கன்னடா, உடுப்பி, ஹாசன் ஆகிய 4 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் வார இறுதி ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது. குடகு, தட்சிண கன்னடா மாவட்டங்களில் தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகளில் எந்த தளர்வும் வழங்கப்படவில்லை. உடுப்பி, சிக்கமகளூரு, கோலார், ஹாசன், மைசூரு, கலபுரகி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 2 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளதால், அங்கு அமலில் உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகிறது.
திருமண மண்டபங்கள்
கேரளாவில் இருந்து வருபவர்கள் ஒரு வாரம் கட்டாயம் அரசு முகாமில் தனிமைப்படுத்தப்படுவார்கள். ஒரு வாரத்திற்கு பிறகு அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதியானால், அவர்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்படுவார்கள்.
திருமண மண்டபங்களில் 50 சதவீத இருக்கைகளை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் விருந்தினர்களின் எண்ணிக்கை 400-க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஏனென்றால் திருமண மண்டபங்களில் பணியாற்றுபவர்கள் கஷ்டத்தில் உள்ளனர். அதனால் இந்த விதிமுறைகளில் தளர்வு வழங்கப்படுகின்றன. மாநிலத்தில் பள்ளி குழந்தைகளில் 6,472 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 14 பேருக்கு மட்டுமே வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இது மிக குறைவு தான்.
தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவையான அளவுக்கு தடுப்பூசிகளை வழங்குவதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. போதுமான அளவுக்கு தடுப்பூசி கிடைப்பது மகிழ்ச்சியான செய்தி.
இவ்வாறு மந்திரி ஆர்.அசோக் கூறினார்.
Related Tags :
Next Story