நாளை முதல் பள்ளிக்கூடங்கள் திறப்பு: சேலத்தில் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி தீவிரம்
நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சேலத்தில் பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சேலம்:
நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சேலத்தில் பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பள்ளிக்கூடங்கள் திறப்பு
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. அதன்பிறகு பல மாதங்களாக ஆன்லைன் மூலமாக மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் பள்ளி, கல்லூரிகளை திறக்க ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், தமிழகத்தில் தற்போது கொரோனா நோய் தொற்று குறைந்து வருவதால் நாளை (புதன்கிழமை) முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் வகுப்புகளை நடத்தவும், கல்லூரிக்கு வரும் மாணவ, மாணவிகளும், ஆசிரியர்களும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுத்தம் செய்யும் பணி
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள் உள்ளன. 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சுழற்சி முறையில் பாடங்களை நடத்தவும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளி நிர்வாகம் கடைபிடிப்பது தொடர்பாக ஏற்கனவே பள்ளி கல்வித்துறை மூலம் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாளை (புதன்கிழமை) பள்ளிக்கூடங்களை திறக்கப்பட உள்ளதால் நேற்று பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளை திறந்து வகுப்பறைகள் மற்றும் வளாகங்களை கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி ஊழியர்கள் மூலம் ஒவ்வொரு வகுப்பறைகளாக சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. மேலும், மாணவிகள் அமரும் மேஜைகள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
தடுப்பூசி
இதேபோல், சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகின்றது. பள்ளிக்கு மாணவ, மாணவிகள் வந்தால் அவர்களுக்கு வாசலில் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதன்பிறகு கைகளில் சானிடைசர் தெளிக்கவும், கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரிய, ஆசிரியைகள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டிருக்கிறார்களா? என்பதை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story