சேலத்தில் பெருமாள் கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா- பக்தர்கள் தரிசனம்
சேலத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
சேலம்:
சேலத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
கிருஷ்ண ஜெயந்தி
நாடு முழுவதும் நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இருப்பினும் கொரோனா தொற்று பரவல் காரணமாக பிரசித்தி பெற்ற கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
சேலம் அருகே கருப்பூரில் உள்ள இஸ்கான் கோவிலில் ஆண்டு தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா அங்கு கொண்டாடப்படவில்லை. அதேநேரத்தில் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
பெருமாள் கோவில்
இதேபோல், சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி அழகிரிநாதருக்கு கிருஷ்ணர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டனர். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நின்றும் சாமி தரிசனம் செய்தனர்.செவ்வாய்பேட்டையில் உள்ள பாண்டுரெங்கநாதர் கோவிலில் நேற்று கோகுலாஷ்டமி விழா நடந்தது. கோவிலில் உள்ள கிருஷ்ணருக்கு அதிகாலை முதல் பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் கிருஷ்ணருக்கு தங்ககவசம் சாத்தப்பட்டிருந்தது. இதையடுத்து நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஒருசில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கிருஷ்ணர் வேடம் அணிவித்து கோவிலுக்கு அழைத்து வந்திருந்தனர். சேலம் அம்மாபேட்டை குருவாயூரப்பன் கோவிலில் தொட்டில் கட்டி அதில் கிருஷ்ணர் சிலையை வைத்து சிறுவர், சிறுமிகள் வழிபட்டனர்.
வீடுகளில் பூஜை
சேலத்தில் உள்ள பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா வழக்கமாக கொண்டாடப்படும். ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் பெரும்பாலான வீடுகளில் கிருஷ்ணர் சிலைகளை அலங்கரித்து வைத்து பெண்கள் பூஜை செய்தனர்.
மேலும், ஒரு சில வீடுகளில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் அணிவித்து அழகு பார்த்தனர்.
Related Tags :
Next Story