பழுதடைந்த குடிநீர் குழாயை சரி செய்யக்கோரி சேலத்தில் டிராக்டரை சிறைபிடித்து பொதுமக்கள் மறியல்


பழுதடைந்த குடிநீர் குழாயை சரி செய்யக்கோரி சேலத்தில் டிராக்டரை சிறைபிடித்து  பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 30 Aug 2021 10:18 PM GMT (Updated: 2021-08-31T03:48:03+05:30)

சேலம் அணைமேட்டில் பழுதடைந்த குடிநீர் குழாயை சரி செய்யக்கோரி டிராக்டரை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம்:
சேலம் அணைமேட்டில் பழுதடைந்த குடிநீர் குழாயை சரி செய்யக்கோரி டிராக்டரை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடிநீர் குழாய் உடைப்பு
சேலம் அணைமேடு பகுதியில் சலவை துறை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான சலவை தொழிலாளர்களும், பொதுமக்களும் குடியிருந்து வருகிறார்கள். இந்த பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. 
இதற்காக கடந்த மாதம் பள்ளம் தோண்டியபோது, குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. ஆனால் ஒரு மாதம் ஆகியும் பழுதடைந்த குழாயை சரி செய்யவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டினர். மேலும் சரிவர குடிநீர் கிடைக்காததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.
டிராக்டர் சிறைபிடிப்பு
இந்த நிலையில் சேலம் அணைமேடு பகுதியில் பழுதடைந்த குடிநீர் குழாயை சரி செய்யக்கோரி அந்த பகுதி பொதுமக்கள் நேற்று காலை அங்கு பாதாள சாக்கடை பணிக்காக வந்த டிராக்டரை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. 
இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகளை முடிப்பதற்குள் பழுடைந்த குடிநீர் குழாயை சரி செய்து சீரான முறையில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story