புதுச்சேரி சட்டசபையில் மேகதாது அணைக்கு எதிராக தீர்மானம்


புதுச்சேரி சட்டசபையில் மேகதாது அணைக்கு எதிராக தீர்மானம்
x
தினத்தந்தி 31 Aug 2021 10:24 AM IST (Updated: 31 Aug 2021 10:24 AM IST)
t-max-icont-min-icon

மேகதாது அணை கட்டுமான விவாதம் எடுத்து கொள்ளப்படக்கூடாது என புதுச்சேரி சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்ற வேண்டுகிறேன்.

புதுச்சேரி, ஆக.
மேகதாது அணைக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
மேகதாது அணை விவகாரம்
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசின் ஒப்புதலை பெற முயற்சி மேற்கொண்டுள்ளது. 
இந்தநிலையில் மேகதாது அணை கட்டப்படுவதற்கு தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அணை கட்டப்பட்டால் தங்களது மாநிலங்களுக்கு நீர்வரத்து முற்றிலும் தடைபடும். 
இதனால் இங்குள்ள விவசாய நிலங்களில் பாசன வசதி செய்ய முடியாமல் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாவார்கள். எனவே அணை கட்ட மத்திய அரசு கர்நாடகத்துக்கு அனுமதி அளிக்க கூடாது என ஆட்சேபனை தெரிவித்து வருகின்றன. 
ஆனால் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக அரசு கங்கணம் கட்டி செயல்பட்டு வருகிறது. அணை கட்ட அனுமதிக்க கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தற்போது புதுச்சேரி சட்டசபையிலும் எதிரொலித்தது. இதுகுறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி நேற்று மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அடியோடு பாதிக்கும்
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிதாக ஓர் அணை கட்ட கர்நாடக அரசு  திட்டமிட்டுள்ளது. இந்த அணை கட்டப்பட்டால் புதுவை மாநிலம் காரைக்கால் டெல்டா பகுதிக்கு வழங்கப்பட வேண்டிய 7 டி.எம்.சி. காவிரி நீர் முழுமையாக கிடைக்கப்பெறாமல் போகும் அபாயம் உள்ளது. 
மேலும் மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் சுமார் 67 டி.எம்.சி. காவிரி தண்ணீரை தடுத்து சேகரித்து வைக்க முடியும். இதனால் கீழ்பாசன பகுதிகளான தமிழகம் மற்றும் புதுவைக்கு வர வேண்டிய நீரில் பற்றாக்குறை ஏற்படும். எனவே காரைக்கால் டெல்டா பகுதியில் விவசாயம் பாதிப்புக்குள்ளாகி புதுச்சேரி மாநிலத்தில் நெல் உற்பத்தி மற்றும் பொருளாதாரம் முற்றிலும் பாதிப்பு என்ற கருத்து உள்ளது.
மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்துமாறு தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 
ஒருமனதாக தீர்மானம்
3.12.2018 அன்று நடைபெற்ற 2-வது காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் புதுவை அரசு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. 
இது தொடர்பாக புதுவையில் 14.7.2021 அன்று ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்துமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுத முடிவு செய்யப்பட்டது. அவ்வாறு 14.7.2021 அன்றே பிரதமர் மோடிக்கும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கும், மத்திய நீர்வள ஆதார துறை மந்திரிக்கும் கடிதம் அனுப்பப்பட்டது.
இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் உள்ள போது அது நீதிமன்ற வரம்புக்கு உட்பட்டதாகும். எனவே நாளை (இன்று செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ள 13-வது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் வரிசை எண் 13.9ல் குறிப்பிடப்பட்டுள்ள மேகதாது அணை கட்டுமான விவாதம் எடுத்து கொள்ளப்படக்கூடாது என புதுச்சேரி சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்ற வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தனி வழக்கு
அப்போது நாஜிம் எம்.எல்.ஏ. குறுக்கிட்டு, ‘இது தொடர்பாக விவாதம் நடத்த கூடாது. இருப்பினும் எனது கருத்தை தெரிவிக்கிறேன். மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சுப்ரீம் கோட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. எனவே அந்த வழக்கில் புதுச்சேரி அரசும் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும்’ என்றார்.
அமைச்சர் லட்சுமிநாராயணன், ‘தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் நாமும் இடம் பெறுவோம். இந்த வழக்கு தொடர்பாக நமக்கும் சுப்ரீம் கோட்டில் இருந்து நோட்டீஸ் வந்து கொண்டு தான் இருக்கிறது’ என்றார்.
அசோக் பாபு, ‘மேகதாது அணை விவகாரம் தொடர்பாக  சுப்ரீம் கோர்ட்டில் புதுச்சேரி அரசு தனியாக வழக்கு தொடர வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் தமிழக அரசு தொடர்ந்து வழக்குடன் சேர்த்து நமது வழக்கையும் சுப்ரீம் கோர்ட்டு நடத்தும். அப்போது வழங்கும் தீர்ப்பில் நமக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்கும். தமிழக அரசுடன் இணைந்து நாம் சென்றோம் என்றால் புதுவைக்கு உரிய முக்கியத்தும் கிடைக்கும் என்று கூற முடியாது’ என்றார்.
ஒருமனதாக நிறைவேற்றம்
இதனை தொடர்ந்து சட்டமன்றத்தில் தீர்மானம் அனைத்துக்கட்சி உறுப்பினர்களால் ஏற்கப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Next Story