தங்களை பராமரிக்கவில்லை என புகார் கூறியதால் மகன்கள் பெயருக்கு மாற்றப்பட்ட பத்திரங்கள் ரத்து


தங்களை பராமரிக்கவில்லை என புகார் கூறியதால் மகன்கள் பெயருக்கு மாற்றப்பட்ட பத்திரங்கள் ரத்து
x

கலசபாக்கம் பகுதியில் நிலத்தை எழுதிவாங்கிக்கொண்டு தங்களை பராமரிக்க வில்லை என்று முதியவர்கள் கொடுத்த புகாரின்பேரில், மகன்கள் பெயரில் எழுதப்பட்ட பத்திரம் ரத்து செய்யப்பட்டது.

திருவண்ணாமலை

கலசபாக்கம் பகுதியில் நிலத்தை எழுதிவாங்கிக்கொண்டு தங்களை பராமரிக்க வில்லை என்று முதியவர்கள் கொடுத்த புகாரின்பேரில், மகன்கள் பெயரில்  எழுதப்பட்ட பத்திரம் ரத்து செய்யப்பட்டது.

கலெக்டர் அலுவலகத்தில் புகார்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த மேல்சோழங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 85). இவர் கடந்த 20-ந் தேதி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், தனக்கு 2 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். நான் 3 ஏக்கர் நிலத்தை எனது மகன்களுக்கு எழுதி கொடுத்தேன். அதில் இருந்து அவர்கள் என்னையும், எனது மனைவியையும் பராமரிக்கமால் தகாத வார்த்தையால் பேசி துன்புறுத்துகின்றனர். எனவே மகன்களுக்கு தானமாக எழுதி கொடுத்த தானசெட்டில்மென்ட் பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். 

பத்திரம் ரத்து

அதேபோல் திருவண்ணாமலை தாலுகா உடையானந்தல் கிராமத்தை சேர்ந்த ராயர் என்பவர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், தனது மகனுக்கு 3.66 ஏக்கர் நிலம் எழுதி கொடுத்து இருந்தேன். அவர் என்னை பாராமரிக்கவில்லை. எனவே அவருக்கு எழுதி கொடுத்த பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இது குறித்து மாவட்ட கலெக்டர் முருகேஷ் உத்தரவின் போலீசார், வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் ராயரையும், மாணிக்கத்தையும் அவரது மகன்கள் பராமரிக்காதது தெரியவந்தது. இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் பெற்றோர் மற்றும் மூத்த குடி மக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம் 2007-ன் கீழ் ராயர் மற்றும் மாணிக்கம், அவர்களது மகன்களுக்கு எழுதி கொடுத்த சொத்து பத்திரத்தை ரத்து செய்து மீண்டும் அவர்களது பெயரிலேயே பட்டா மாற்றம் செய்யப்பட்டது. 

கலெக்டர் வழங்கினார்

அதை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ராயர் மற்றும் மாணிக்கம் ஆகியோர் வரவழைக்கப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்பட்ட பத்திரங்களை கலெக்டர் முருகேஷ் அவர்களிடம் வழங்கினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமரசாமி, ஆரணி உதவி கலெக்டர் கவிதா, உதவி கலெக்டர் (பயிற்சி) கட்டா ரவிதேஜா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story