ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிடங்கு வசதிகளை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கலெக்டர் அறிவுறுத்தல்


ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிடங்கு வசதிகளை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கலெக்டர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 31 Aug 2021 3:14 PM GMT (Updated: 2021-08-31T20:44:29+05:30)

ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிடங்கு வசதிகளை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் கேட்டு கொண்டுள்ளார்.

திருவண்ணாமலை

ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிடங்கு வசதிகளை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் கேட்டு கொண்டுள்ளார். 

இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒழுங்குமுறை விற்பனை கூடம்

திருவண்ணாமலை விற்பனைக்குழு கட்டுப்பாட்டின் கீழ் ஆரணி, செய்யாறு, செங்கம், சேத்துப்பட்டு, திருவண்ணாமலை, தேசூர், வேட்டவலம், வந்தவாசி, போளூர், புதுப்பாளையம், கீழ்பென்னாத்தூர், வாணாபுரம், மங்களமாமண்டூர், தூசி, பெரணமல்லூர், தானிப்பாடி, தெள்ளாறு, நாயுடுமங்கலம், ஆதமங்கலம்புதூர் மற்றும் கண்ணமங்கலம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கிடங்கு மற்றும் உலர்களம் வசதிகள் உள்ளன. 

ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வேளாண் விளை பொருட்களை விற்பனை செய்வதால் விவசாயிகளுக்கு மறைமுக ஏலத்தின் மூலம் விளைபொருளின் தரத்திற்கேற்ப அதிகபட்ச விலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. 

ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விற்பனை செய்யப்படும் விளைபொருட்களுக்கு தரகு, கமிஷன் மற்றும் மகிமை பிடித்தம் ஏதுமின்றி நேரடியாக உரிய விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மின்னஞ்சல் முறையில் பணம் செலுத்தப்படுகிறது. சரியான எடை, போட்டி விலை மற்றும் இருப்பு வைக்க வசதி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் உள்ளன.

மறைமுக ஏலம்

விவசாயிகள் கொண்டு வரும் விளை பொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் இருப்பு வைக்க கிடங்கு வசதியும், உலர்த்துவதற்கு உலர்கள வசதியும் உள்ளது. 
ஒரு விவசாயி பொருளீட்டுக்கடன் பெற்று அதிக பட்சமாக 180 நாட்களுக்கு தங்கள் விளைபொருட்களை கிடங்கில் சேமிக்க இயலும். 

இதில் முதல் 15 நாட்களுக்கு எவ்வித வாடகையும் வசூல் செய்யப்படுவதில்லை. மீதமுள்ள நாட்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு குவிண்டாலக்கு 20 பைசா வீதம் மட்டுமே வாடகை வசூல் செய்யப்படுகிறது. 

மேலும் விளைபொருட்களை கிடங்கில் இருப்பு வைக்கும் நிலையில் விவசாயிகளின் அவசர பணத்தேவைகளுக்கு அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு ரூ.3 லட்சம் வீதம் பொருளீட்டுக்கடன் வழங்கப்படுகிறது. இருப்பு வைத்த 15 நாட்களுக்கு எவ்வித வட்டியில்லா சலுகை வழங்கப்படுகிறது. மீதி நாட்களுக்கு மிகக்குறைந்த வட்டியாக 5 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஆகையால் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மறைமுக ஏலத்தில் வைத்து விற்பனை செய்து அதிகபட்ச விலையினைப் பெற்று பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
----

Next Story