கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொடர்புடைய அவினாசி பகுதியை சேர்ந்த மேலும் ஒருவரை போலீசார் கைது
கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொடர்புடைய அவினாசி பகுதியை சேர்ந்த மேலும் ஒருவரை போலீசார் கைது
சேவூர்,
கர்நாடக மாநிலம் மைசூரூ அருகே கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொடர்புடைய அவினாசி பகுதியை சேர்ந்த மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கூட்டு பாலியல் பலாத்காரம்
மும்பையை சேர்ந்த 19 வயது மாணவி கர்நாடக மாநிலம் மைசூரூவில் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கடந்த 24-ந் தேதி தனது காதலருடன் ஒரு காரில் மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்தில் இருக்கும் லலிதா திரிபுரா பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட ஒரு கும்பல் மாணவியின் காதலனை சரமாரியாக தாக்கிவிட்டு, மாணவியை புதருக்குள் தூக்கிச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
மனதை பதைபதைக்க வைக்கும் இந்த கொடூர சம்பவம் தொடர்பாக ஆலனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருப்பூர் மாவட்டம், அவினாசியை அடுத்த சேவூர் பேரநாயக்கன்புதூர், தண்ணீர் பந்தல் செல்வபுரத்தை சேர்ந்த பிரகாஷ் என்கிற அரவிந்த் (வயது 21), லூர்துபுரத்தில் தலைமறைவாக இருந்த ஈரோடு மாவட்டம் தாளவாடி சூசையபுரத்தை சேர்ந்த ஜோசப் (28), லூர்துபுரம் கருவலங்காடு பகுதியை சேர்ந்த முருகேசன் (22) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை கடந்த மாதம் 28-ந்தேதி கைது செய்தனர். மேலும் தாளவாடி, சூசையபுரத்தை சேர்ந்த பூபதி (28) என்பவரையும் கைது செய்து விசாரணைக்காக மைசூருக்கு அழைத்து சென்றனர்.
மேலும் ஒருவர் கைது
கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவினாசியை அடுத்த மங்கரசு வலையபாளையம், தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்த ஆனந்தன் மகன் பேபி என்கிற விஜயகுமார் (26) என்பவருக்கும் இந்த வழக்கில் தொடர்புடையது தெரியவந்தது. இதையடுத்து ஆலனஹள்ளி போலீசார் நேற்று மங்கரசு வலையபாளையம் வந்து பேபி என்ற விஜயகுமாரை கைது செய்தனர்.
கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சேவூர் பகுதியில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story