வேலூர் மாவட்டத்தில் 281 பள்ளிகள் இன்று திறப்பு


வேலூர் மாவட்டத்தில் 281 பள்ளிகள் இன்று திறப்பு
x
தினத்தந்தி 31 Aug 2021 4:08 PM GMT (Updated: 31 Aug 2021 4:08 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் 281 பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது. இதையொட்டி 95 சதவீத ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் 281 பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது. இதையொட்டி 95 சதவீத ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இன்று (புதன்கிழமை) முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. மேலும் அரசு பஸ்களில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் இலவசமாக பயணம் செய்யலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகள் இருக்கும் பகுதிகளில் ஏற்கனவே இயக்கப்பட்ட அரசு பஸ்கள் முழு அளவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமின்றி டவுன் பஸ்கள் பள்ளி நேரங்களில் நேரம் தவறாமல் இயக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து அதிகாரிகள் அரசு டவுன் பஸ்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.

இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 222 அரசு பஸ்கள் இயக்கப்படும். அரசு பஸ்களில் மாணவ-மாணவிகள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கண்டக்டர்களிடம் காண்பித்து தங்களுடைய இருப்பிடத்தில் இருந்து படிக்கும் பள்ளி வரை சென்று வர கட்டணமின்றி பயணிக்கலாம் என்றனர்.

சுகாதார நடவடிக்கை

வேலூர் மாவட்டத்தில் உயர்நிலை, மேல்நிலை மற்றும் தனியார் என 281 பள்ளிகள் உள்ளன. இதில் 9-ம் வகுப்பில் 21,039 மாணவ- மாணவிகளும், 10-ம் வகுப்பில் 20,516 மாணவ- மாணவிகளும், 11-ம் வகுப்பில் 16,588 மாணவ- மாணவிகளும், 12-ம் வகுப்பில் 17,607 மாணவ- மாணவிகளும் என மொத்தம் 75,750 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். 

பள்ளிக்கு வருபவர்களின் உடல்வெப்ப நிலையை கண்டறிய தெர்மல் ஸ்கேனர் கருவி பயன்படுத்தப்படுகிறது. காய்ச்சல் கண்டறியப்பட்ட மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளனர். பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு பள்ளிகளில் கிருமிநாசினி தெளித்தல் போன்ற சுகாதார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், மாவட்டத்தில் கடந்த 29-ந் தேதி விவரப்படி பள்ளிகளில் பணியாற்றி வரும் 6,324 ஆசிரியர்களில் 5,070 ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். இதையடுத்து பலர் தடுப்பூசி போட்டுள்ளார்கள். மாவட்டத்தில் 95 சதவீத ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். இதேபோல 1,592 ஊழியர்களில் 1,169 ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கல்லூரிகள்

வேலூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம், திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்கள் உள்ளது. இங்கு 27 அரசு கலைக்கல்லூரிகள், 12 அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகள் 116 சுயநிதிகல்லூரிகள் செயல்படுகிறது. கல்லூரிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு அனைத்து முன் ஏற்பாடுகளும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story