புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரப்புவதாக கூறி தூத்துக்குடி பெண்ணிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் நெல்லை வாலிபருக்கு வலைவீச்சு
தூத்துக்குடி பெண்ணிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்
தூத்துக்குடி:
தூத்துக்குடியை சேர்ந்த பெண்ணின் புகைப்படத்தை ‘மார்பிங்’ செய்து சமூகவலைதளங்களில் பரப்பிவிடுவதாக கூறி ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய நெல்லை வாலிபரை சைபர் கிரைம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தூத்துக்குடி பெண்
நெல்லை மாவட்டம் இடையன்குடியை சேர்ந்தவர் ஜெயந்தன் ஜோசுவா (வயது 35). இவர் ஊரடங்கு காலத்தில் தூத்துக்குடியை சேர்ந்த ஒரு பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது அந்த பெண்ணிடம், தான் சிறுவயதில் அவருடன் ஒன்றாக படித்தவர் என்று அறிமுகம் செய்து கொண்டார். அந்த பெண்ணின் கணவர் சென்னையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் அந்த பெண்ணின் குழந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் குழந்தைக்கு மதுரையில் வைத்து சிகிச்சை பெறுவதற்கு ஜெயந்தன் ஜோசுவா உதவி செய்தார். அதன்பிறகு அந்த பெண்ணுடன் ஜெயந்தன் ஜோசுவா தொடர்ந்து பேசி வந்து உள்ளார். 2 பேரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்
அதன்பிறகு ஜெயந்தன் ஜோசுவாவின் பழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டது. அவர் அந்த பெண்ணின் புகைப்படத்தை ‘மார்பிங்’ செய்து சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவதாக கூறி மிரட்டி தொடர்ந்து பணம் கேட்டு உள்ளார். இதனால் பயந்து போன அவர் ரூ.7 லட்சம் வரை கொடுத்ததாக கூறப்படுகிறது. கடைசியாக ரூ.1 கோடி தருமாறு கேட்டு மிரட்டியதாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் புகார் மனு கொடுத்தார். அதன்பேரில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் வழக்குப்பதிவு செய்து, ஜெயந்தன் ஜோசுவாவை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story