ராஜவாய்க்காலை பார்வையிட அனுமதி விவசாயத்துக்கு குடகனாற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு
ராஜவாய்க்காலை பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்றும், விவசாயத்துக்கு குடகனாற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
திண்டுக்கல்:
ஆத்தூரில் இருந்து குடகனாற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து தண்ணீர் பங்கீடு தொடர்பாக குழு அமைக்கப்பட்டு, ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. எனினும் இதுவரை தண்ணீர் பிரச்சினை முடிவுக்கு வரவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் திண்டுக்கல் அருகேயுள்ள அனுமந்தராயன்கோட்டையை சேர்ந்த பொதுமக்கள் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
பின்னர் குடகனாற்றை பார்வையிட அனுமதி கோரியும், ஆற்றில் தண்ணீர் திறக்க வலியுறுத்தியும் மனு கொடுத்தனர். அதுகுறித்து அவர்கள் கூறுகையில், மேற்குத்தொடர்ச்சி மலையில் தொடர் மழை பெய்வதால் கடந்த 4 மாதங்களாக தண்ணீர் வரத்து உள்ளது. ஆனால் குடகனாற்றில் இதுவரை தண்ணீர் திறந்து விடவில்லை. எனவே ஆத்தூர் காமராஜர் அணையின் நீர்தேக்க பகுதி, குடகனாறு, ராஜவாய்க்கால் ஆகியவற்றை நாங்கள் விவசாயிகளுடன் சென்று பார்க்க அனுமதி அளிக்க வேண்டும்.
இதற்காக போலீசாரிடம் மனு கொடுத்து இருக்கிறோம். இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. எனவே அணை மற்றும் ஆற்றை பார்வையிட அனுமதிக்க வேண்டும். மேலும் அனுமந்தராயன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் எங்கள் பகுதியில் விவசாயம் செய்வதற்கு தேவையான தண்ணீரை, குடகனாற்றில் திறந்து விடவேண்டும், என்றனர்.
Related Tags :
Next Story