புன்னம்பழா வனத்துக்கு காட்டு யானைகள் விரட்டியடிப்பு


புன்னம்பழா வனத்துக்கு காட்டு யானைகள் விரட்டியடிப்பு
x
தினத்தந்தி 31 Aug 2021 10:35 PM IST (Updated: 31 Aug 2021 10:35 PM IST)
t-max-icont-min-icon

புன்னம்பழா வனத்துக்கு காட்டு யானைகள் விரட்டியடிப்பு

கூடலூர்

கூடலூர் அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த காட்டு யானைகளை வனத்துறையினர்  புன்னம்பழா வனத்துக்கு விரட்டியடித்தனர்.

கும்கி யானைகள் மூலம் கண்காணிப்பு

கூடலூர் தாலுகா தேவாலா, நாடுகாணி பகுதியில் கடந்த சில வாரங்களாக காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. 
இதைத்தொடர்ந்து காட்டு யானைகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தினர். 

இதன் காரணமாக கடந்த மாதம் 26-ந் தேதி முதல் 4 கும்கி யானைகள் உதவியுடன் தேவாலா வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து நாடுகாணி பொன்னூர் பகுதியில் இருந்து மூச்சுக்குன்னு, கோழிக்கொல்லி வனப்பகுதிக்கு காட்டு யானைகள் இடம் பெயர்ந்து சென்றன.

 இதைத்தொடர்ந்து காட்டு யானைகளை இரவு பகலாக வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். மேலும் ஊருக்குள் நுழைவதை தடுக்க கும்கி யானைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

விரட்டியடிப்பு

இந்த நிலையில் நேற்று பிளமூலா வனத்தில் நின்றிருந்த காட்டு யானைகளை வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் புன்னம்பழா வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். 

தொடர்ந்து அப்பகுதியில் வன ஊழியர்கள் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். மேலும் கும்கி யானைகளும் புன்னம்பழா மற்றும் நாடுகாணி தாவரவியல் சுற்றுச்சூழல் பூங்கா வனத்தில் கரையோரம் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளது.

வனத்துறையினரின் தொடர் நடவடிக்கையால் பல நாட்களாக போராடி காட்டு யானைகள் கேரள எல்லையான புன்னம்பழா வனத்துக்குள் விரட்டப்பட்டுள்ளது.

கண்காணிப்பு பணி தீவிரம்

இதுகுறித்து தேவாலா வனச்சரகர் பிரசாத் கூறியதாவது:-
4 கும்கி யானைகள், 30 வன ஊழியர்கள் மூலம் கடந்த சில நாட்களாக கொட்டும் மழையிலும் காட்டு யானைகளை விரட்டும் பணி நடைபெற்றது. இதன் பலனாக புன்னம்பழா வனத்துக்குள் காட்டு யானைகள் விரட்டியடிக்கப்பட்டு உள்ளன.

இந்த யானைகளை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கூடிய விரைவில் காட்டு யானைகள் கேரளா வனத்துக்குள் விரட்டியடிக்கப்படும்.
 மேலும் தொடர் மழை பெய்து வருவதால் பாண்டியாற்றில் வெள்ளம் ஓடுவதால் காட்டு யானைகள் மீண்டும் திரும்பி வர வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story