ஓசூரில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கட்டிட தொழிலாளர்கள் 2 பேர் கைது
ஓசூரில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நவதி ராஜீவ்காந்தி லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 45). கட்டிட தொழிலாளி. இவரது உறவினர் ஒருவர் குடிநீர் கேன் வினியோகம் செய்து வருகிறார். சம்பவத்தன்று நாராயணசாமி குடிநீர் கேன் விற்பனை செய்வதற்காக கடையில் அமர்ந்து இருந்தார்.
அப்போது 13 வயதுடைய சிறுமி ஒருவர் கடைக்கு குடிநீர் கேன் வாங்க வந்தார். அந்த சிறுமியை நாராயணசாமி வலுக்கட்டாயமாக அருகில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். நாராயணசாமி ஏற்கனவே திருமணம் ஆனவர். அவருக்கு மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர்.
2 பேர் கைது
இந்த நிலையில் ஓசூர் பாரதிதாசன் நகரைச் சேர்ந்த தர்மா (30) என்ற கட்டிட தொழிலாளி அதே சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி, பாலியல் தொந்தரவு செய்தார். தர்மாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் ஓசூர் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நாராயணசாமி, தர்மா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ, கொலை மிரட்டல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story