ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு: விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தர்ணா மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட 688 பேர் கைது


ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு: விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தர்ணா  மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட 688 பேர் கைது
x
தினத்தந்தி 31 Aug 2021 5:19 PM GMT (Updated: 31 Aug 2021 5:19 PM GMT)

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் மாவட்டத்தில் 23 இடங்களில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்பட 688 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம், 

கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது, விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போதைய தி.மு.க. அரசு இந்த பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதாக அறிவித்தது. இதற்கு அ.தி.மு.க. தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

இந்த நிலையில், நேற்று காலை சட்டமன்றத்தில் 2021-ம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டம் (திருத்தம் மற்றும் நீக்கம்) அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.


சி.வி.சண்முகம் கைது

இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விழுப்புரத்திலேயே ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடர வேண்டும் என வலியுறுத்தியும் விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் நேற்று காலை 11.15 மணியளவில் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு தனியாக தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் மேற்கு போலீசார் அங்கு விரைந்து சென்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரம் காகுப்பம் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

அ.தி.மு.க.வினர் சாலை மறியல்

இதையறிந்ததும் விழுப்புரம் காந்தி சிலை அருகில் காலை 11.30 மணியளவில் அ.தி.மு.க.வினர் திரண்டு வந்தனர். அவர்கள், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை மூட முயற்சிக்கும் தி.மு.க. அரசை கண்டித்தும், விழுப்புரத்திலேயே ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடர வலியுறுத்தியும், கைதான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை உடனடியாக விடுவிக்கக்கோரியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இவர்களின் மறியல் போராட்டம் காரணமாக விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
உடனே விழுப்புரம் நகர போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று சி.வி.சண்முகத்தை தங்க வைத்திருந்த அதே திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

செஞ்சி, திண்டிவனம்

வல்லம் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நட்டார் மங்கலத்தில்  வடக்கு ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பேரவை ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், மகளிரணி ஆனந்தி அண்ணாதுரை உள்பட 47 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆலம்பூண்டியில் மறியலில் ஈடுபட்ட செஞ்சி மேற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி உள்பட 18 பேரும், செஞ்சி கூட்டு ரோட்டில் மறியலில் ஈடுபட்ட நகர செயலாளர் வெங்கடேசன் தலைமையில், செஞ்சி ஒன்றிய செயலாளர் சோழன், மாநில வழக்கறிஞரணி கதிரவன், மாவட்ட அவைத் தலைவர் கண்ணன்உள்பட 22 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனத்தில் அ.தி.மு.க.வினர் காந்தி சிலை அருகிலும், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஜக்காம்பேட்டை புறவழிச் சாலை சந்திப்பிலும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 சாலை மறியலில் நகர செயலாளர் தீனதயாளன், முன்னாள் நகர்மன்ற தலைவர் வெங்கடேசன், முன்னாள் நகர மன்ற துணை தலைவர் ஷெரிப், மரக்காணம் மேற்கு ஒன்றிய செயலாளர் நடராஜன், அவைத்தலைவர் தீபம் குமார், நகர ஜெயலலிதா  பேரவை செயலாளர் ரூபன் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 688 பேர் கைது
இதேபோல் , மாவட்டம் முழுவதும் 23 இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் அ.தி.மு.க.வினர் 688 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான வர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story