சென்னை ஆடிட்டர் கொலையில் 9 பேர் கைது வழக்கு கிருஷ்ணகிரிக்கு மாற்றம்


சென்னை ஆடிட்டர் கொலையில் 9 பேர் கைது வழக்கு கிருஷ்ணகிரிக்கு மாற்றம்
x
தினத்தந்தி 31 Aug 2021 5:20 PM GMT (Updated: 2021-08-31T22:52:38+05:30)

சென்னை ஆடிட்டர் கொலையில் 9 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் வழக்கு கிருஷ்ணகிரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி,

சென்னை வேளச்சேரியை சேர்ந்த ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதான் (வயது 48) கடந்த 27-ந் தேதி கிருஷ்ணகிரிக்கு காரில் வந்தவர் மாயமானார். அவரது மனைவி பூர்ணிமா கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரித்தனர்.

இந்த நிலையில் போலீசாரின் விசாரணையில் ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதானை பண விவகாரத்தில் சிலர் கொன்று சாமல்பட்டி அருகே மாந்தோப்பில் புதைத்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பெரம்பலூரை சேர்ந்த சபரீஷ் மற்றும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

9 பேர் கைது 

இந்த கொலையில் தொடர்புடைய பெரம்பலூர் சபரீஷ், மேட்டூர் கோபிநாத், பெரம்பலூர் மணிமன்னன், ஊத்தங்கரை தாலுகா கொடமாண்டப்பட்டி திருமால், பெங்களூரு பிரசாந்த், லோகநாதன், ஊத்தங்கரை சாமல்பட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஜிம் மோகன், மத்தூர் திருப்பதி, சென்னை டி.நகர் வக்கீல் கிருஷ்ணகுமார் ஆகிய 9 பேரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

கொலையான ஆடிட்டர் மாயமானது தொடர்பாக முதலில் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் மாயம் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவரது உடல் சாமல்பட்டியில் கண்டுடெடுக்கப்பட்டதால் சாமல்பட்டி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

கிருஷ்ணகிரிக்கு மாற்றம் 

இந்த நிலையில் ஆடிட்டர் கொலை வழக்கு கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது, ஏற்கனவே மாயம் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை கொலை வழக்காக மாற்றி உள்ளோம். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் மேலும் பல முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story