அலமேலுமங்காபுரத்தில் ஓய்வுப்பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு


அலமேலுமங்காபுரத்தில் ஓய்வுப்பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 31 Aug 2021 11:06 PM IST (Updated: 31 Aug 2021 11:06 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் அலமேலுமங்காபுரத்தில் ஓய்வுப்பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர் வீட்டில் 10 பவுன் நகை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

வேலூர்

வேலூர் அலமேலுமங்காபுரத்தில் ஓய்வுப்பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர் வீட்டில் 10 பவுன் நகை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

10 பவுன் நகை திருட்டு

வேலூர் அலமேலுமங்காபுரம் ஜெகஜோதிநகர் முதல்தெருவை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 64), ஓய்வுப்பெற்ற அரசு போக்குவரத்துக்கழக ஊழியர். இவர் கடந்த 29-ந் தேதி மாலை வீட்டை பூட்டி விட்டு தனது மனைவி, மகனுடன் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள ஈஸ்வரன் கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு நேற்று முன்தினம் இரவு கந்தசாமி குடும்பத்தினர் வேலூருக்கு திரும்பினர்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். வரவேற்பறை, படுக்கையறையில் பொருட்கள், துணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த மோதிரம், வளையல் உள்ளிட்ட 10 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிசென்றிருந்தனர்.
போலீஸ் விசாரணை

இதுகுறித்து கந்தசாமி சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் சென்று பார்வையிட்டனர். அப்போது மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் கதவை கடப்பாரையால் நெம்பி திறந்து திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். திருட்டு போன நகையின் மதிப்பு சுமார் ரூ.3 லட்சமாகும்.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்தார். மேலும் அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்மநபர்களின் உருவங்கள் பதிவாகி உள்ளதா என்று போலீசார் ஆய்வு செய்து, அவர்களை தேடி வருகிறார்கள். 

Next Story