உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டார்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டார்
கள்ளக்குறிச்சி
வாக்காளர் பட்டியல் வெளியீடு
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டார். இதை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி பெற்றுக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீதர் நிருபர்களிடம் கூறியதாவது:-
3,162 வார்டுகள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கல்வராயன்மலை, சங்கராபுரம், தியாகதுருகம், ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், திருநாவலூர், உளுந்தூர்பேட்டை என மொத்தம் 9 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் 19 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 180 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 412 கிராம ஊராட்சிகள் மற்றும் 3,162 கிராம ஊராட்சி வார்டுகள் உள்ளடக்கிய நிறைவு செய்யப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
9,61,770 வாக்காளர்கள்
மேலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், கிராம ஊராட்சி அலுவலகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்டத்தில் 4 லட்சத்து 83 ஆயிரத்து 772 ஆண் வாக்காளர்கள், 4 லட்சத்து 77 ஆயிரத்து 812 பெண் வாக்காளா்கள், 186 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 9 லட்சத்து 61 ஆயிரத்து 770 வாக்காளர்கள் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) குமாரி, ஊரக வளர்ச்சி பிரிவு அலுவலக மேலாளர் ராஜேந்திரன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
கள்ளக்குறிச்சி ஒன்றியம்
இதைத் தொடர்ந்து ஊராட்சி ஒன்றியங்களில் அந்தந்த வட்டார வளர்ச்சி அதிகாரிகள் வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர். கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் வெளியிட்டார். இதை ஒன்றியத்துக்குட்பட்ட 46 ஊராட்சி செயலாளர்களும் பெற்றுக்கொண்டனர். அப்போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (பொது)ஆறுமுகம், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(ஊராட்சி) பார்வதி, தேர்தல் உதவியாளர் கண்ணையன் மற்றும் அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் உடன் இருந்தனர்.
ரிஷிவந்தியம்-சங்கராபுரம்
பகண்டை கூட்டு ரோட்டில் உள்ள ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகம், துரைசாமி ஆகியோர் கலந்துகொண்டு வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர். ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் 258 வாக்குச்சாவடி மையங்களில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 703 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினகர்பாபு, அயூப்கான், மணி, தொம்மையன், குமரன் மற்றும் ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டனர்.
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்லதுரை, ரவிச்சந்திரன் ஆகியோர் வெளியிட்டனர். அப்போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சவரிராஜன், கண்ணதாசன், கணக்காளர் ரங்கநாதன், உதவியாளர் பரமசிவம், ஊராட்சி செயலாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story