பாலை தரையில் கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டம்


பாலை தரையில் கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 1 Sept 2021 12:48 AM IST (Updated: 1 Sept 2021 12:48 AM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடி அருகே பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி, பாலை தரையில் கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திட்டக்குடி, 

திட்டக்குடி அருகே கூடலூர் குடிகாட்டில் பால் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையம் முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் நேற்று ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள், பசும்பால் ஒரு லிட்டா் ரூ.32-க்கும், எருமை பால் லிட்டா் ரூ.42-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. 
தற்போது தீவன செலவு அதிகரித்து வருவதால் இந்த விலை எங்களுக்கு போதுமானதாக இல்லை. கொள்முதல் விலை குறைவால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. எனவே பசும்பால் லிட்டா் ரூ.42-க்கும், எருமை பால் லிட்டருக்கு ரூ.52-க்கும் கொள்முதல் செய்ய வேண்டும்.
மேலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள பால் குளிரூட்டும் மையங்களை தரம் உயர்த்த வேண்டும். வெண்கரும்பூர், சத்தியவாடி ஆகிய பகுதிகளில் குளிரூட்டும் மையங்கள் அமைக்க வேண்டும். தேசிய கூட்டுறவு வங்கிகளில் கறவை மாட்டுக்கு கடன் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

போராட்டம்

தொடர்ந்து தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பால் உற்பத்தியாளர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பாலை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில துணை செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
இதில் ராஜேந்திரன், பூங்குன்றன், பாரதி, முத்துசெல்வன், பாலகிருஷ்ணன் உள்பட பால் உற்பத்தியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story