கன்னட நடிகை, போதைப்பொருள் பயன்படுத்தியது அம்பலம்
பெங்களூருவில் நடந்த மருத்துவ பரிசோதனையில் கன்னட நடிகை போதைப்பொருள் பயன்படுத்தியது அம்பலமாகி உள்ளது. அதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு:
நடிகை கைது
பெங்களூரு கோவிந்தபுரா போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கடந்த மாதம்(ஆகஸ்டு) போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நைஜீரியாவை சேர்ந்த தாமஸ் என்பவரை கைது செய்திருந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கன்னட நடிகை, முக்கிய பிரமுகர்கள், பிரபலங்களின் மகன்களுக்கு போதைப்பொருட்கள் விற்பனையில் தொடர்பு இருப்பதாக கூறி இருந்தார்.
இதையடுத்து, கன்னட நடிகையும், மாடல் அழகியுமான சோனியா அகர்வாலுக்கு சொந்தமான ராஜாஜிநகர் 4-வது பிளாக்கில் உள்ள வீட்டில் போலீசார் சோதனை நடத்தி 40 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்திருந்தனர். பின்னர் நண்பர் திலீப் என்பவருடன் நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த சோனியா அகர்வாலை கோவிந்தபுரா போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.
போதைப்பொருள் பயன்படுத்தினார்
அப்போது அவர், போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டதும், போதைப்பொருட்கள் பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து, நடிகை சோனியா அகர்வால், அவரது நண்பர் திலீப் ஆகியோர் போதைப்பொருட்கள் பயன்படுத்தினார்களா? என்பதை கண்டறிய மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகள் நேற்று கோவிந்தபுரா போலீசாருக்கு கிடைத்துள்ளது.
அதில், நடிகை சோனியா அகர்வால் போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பது அம்பலமாகி உள்ளது. மருத்துவ பரிசோதனையில் அவரும், நண்பர் திலீப்பும் போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதுகுறித்து சோனியா அகர்வால், அவரது நண்பரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொழில்அதிபர்களிடம் விசாரணை
இதற்கிடையில், போதைப்பொருட்கள் விற்பனையில் தொடர்புடைய தொழில்அதிபர்களான பத்மநாபநகரை சேர்ந்த பரத், பென்சன் டவுனை சேர்ந்த டிஜே வஜன் சென்னப்பாவை கோவிந்தபுரா போலீசார், கே.ஜி.ஹள்ளி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி இருந்தனர். அவர்களது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் போதைப்பொருள் எதுவும் சிக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, 2 பேரையும் நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசார் அனுப்பி வைத்திருந்தனர்.
ஆனால் அவர்கள் 2 பேரும் போதைப்பொருட்கள் பயன்படுத்தி உள்ளார்களா? என்பதை கண்டறிய மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு இருந்தது. அந்த பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பரத் மற்றும் டிஜே வஜன் சென்னப்பாவை விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் தெரிவித்திருந்தனர். அதன்படி, நேற்று 2 பேரும் ஆஜராகி இருந்தார்கள். அவர்களிடம் கோவிந்தபுரா போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுள்ளனர்.
Related Tags :
Next Story