முன்னாள் ராணுவ வீரரை தாக்கி கொலை மிரட்டல்; 7 பேர் மீது வழக்கு
நிலத்தகராறில் முன்னாள் ராணுவ வீரரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நொய்யல்,
நடையனூர் அருகே கரைப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 64). இவர் இந்திய ராணுவத்தில் 35 ஆண்டுகளாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். பின்னர் கரூர் பரமத்தியில் உள்ள உயர் மின் கோபுரம் அமைக்கும் பவர்கிரேடு நிறுவனத்தில் வேலை பார்த்து அதில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார். இந்தநிலையில் கணேசனுக்கும், அவரது அண்ணன் பாலகிருஷ்ணன் மகன்களுக்கும் நிலப்பிரச்சினை இருந்து வந்தது. கணேசன் நேற்று வீட்டில் இருந்தபோது அங்கு வந்த பாலகிருஷ்ணனின் மகன்களான ராதாகிருஷ்ணன், கவுரி சங்கர் ஆகியோர் கணேசனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கணேசனின் மனைவி ஓடி வந்து அவர்களை தடுத்தார். இதில் ஆத்திரம் அடைந்த பாலகிருஷ்ணனின் மனைவி சாமியாத்தாள், ராதாகிருஷ்ணன் மனைவி ராமலட்சுமி, கவுரிசங்கர் மனைவி சந்திரா, அவரது மகன் பாலாஜி, மற்றொரு மகன் புவனேஷ் ஆகியோர் சேர்ந்து கணேசனின் மனைவியை தாக்கியுள்ளனர். மேலும் அவர்கள் 2 பேருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் கணேசன் புகார் அளித்தார். அதன்பேரில் ராதாகிருஷ்ணன், கவுரிசங்கர், சாமியாத்தாள், ராமலட்சுமி, சந்திரா, பாலாஜி, புவனேஷ் ஆகிய 7 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story