நெல்லையில் அ.தி.மு.க.வினர் சாலைமறியல்; 63 பேர் கைது


நெல்லையில் அ.தி.மு.க.வினர் சாலைமறியல்; 63 பேர் கைது
x
தினத்தந்தி 1 Sept 2021 2:09 AM IST (Updated: 1 Sept 2021 2:09 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் அ.தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 63 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:
நெல்லையில் சாலை மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் 63 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜெயலலிதா பல்கலைக்கழகம்

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று மாநிலம் முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர்.

சாலை மறியல்

நெல்லையில் வண்ணார்பேட்டை மேம்பாலம் அருகில் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான தச்சை கணேசராஜா தலைமையில் அ.தி.மு.க.வினர் திரண்டனர். அங்கு திடீரென்று நடுரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ெரட்டியார்பட்டி நாராயணன், ஆர்.பி.ஆதித்தன், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, மாநில அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், சிறுபான்மை அணி செயலாளர் மகபூப் ஜான், பெரியபெருமாள், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குட்டி பாண்டியன், மருதூர் ராமசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

63 பேர் கைது

இதனால் வண்ணார்பேட்டை ரவுண்டானா பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அங்கு தயார் நிலையில் இருந்த போலீசார், அ.தி.மு.க.வினரை கைது செய்து அந்த பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்து வைத்தனர். 
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 63 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

அம்பை- விக்கிரமசிங்கபுரம்

அம்பை தாலுகா அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர் விஜய் பாலாஜி தலைமையில் அ.தி.மு.க.வினர் சாலை மறியிலில் ஈடுபட்டனர். மணிமுத்தாறு முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் சிவன் பாபு, நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் மாரிமுத்து, மகளிரணி செயலர் குமுதா பெருமாள், ஒன்றிய துணை செயலர் பிராங்கிளின், வக்கீல்கள் குமார், மணி அய்யப்பன், மணிமுத்தாறு நகர செயலாளர் ராமையா, ஜெயலலிதா பேரவை செயலர் வடிவேலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 31 பேரை அம்பை போலீசார் கைது செய்தனர்.
விக்கிரமசிங்கபுரத்தில் நகர அ.தி.மு.க. செயலாளர் கண்ணன் தலைமையில் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கலை இலக்கிய மாவட்ட பிரிவு செயலாளர் மின்னல் மீனாட்சி, எம்.ஜி.ஆர். மன்றம் சிங்கை அருண், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் செல்வ ஆண்டனி உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

Next Story