குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க சிறப்பு திட்டம் - பசவராஜ் பொம்மை பேட்டி


குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க சிறப்பு திட்டம் - பசவராஜ் பொம்மை பேட்டி
x
தினத்தந்தி 31 Aug 2021 8:53 PM GMT (Updated: 2021-09-01T02:23:50+05:30)

கலபுரகி, ராய்ச்சூர், யாதகிரி மாவட்டங்களில் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

பெங்களூரு:

சிறப்பு திட்டம்

  கர்நாடக அரசின் உயர் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

  பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த விஷயத்தில் யாதகிரி, கலபுரகி, ராய்ச்சூர் மாவட்டங்களில் குழந்தைகள் அதிகளவில் ஊட்டச்சத்து குறைபாடுடன் இருக்கிறார்கள். கல்வியிலும் அந்த மாவட்டங்களின் குழந்தைகள் பின்தங்கியுள்ளனர். இந்த 3 மாவட்டங்களிலும் பெண்களின் ஆரோக்கியம் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கல்வியை அதிகரிக்கவும் ஒரு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

இலக்கை அடைய வேண்டும்

  பல்வேறு துறைகளின் சார்பில் அமல்படுத்தப்படும் திட்டங்களின் நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது. நடப்பு ஆண்டில் 2-வது காலாண்டு முடிவடைகிறது. துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இதுவரை எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் விவரங்களை சேகரித்தேன். அடுத்த காலாண்டிற்குள் இலக்கை அடைய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

  மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு மத்திய அரசு தனது பங்கை ஒதுக்கியதும், மாநில அரசின் பங்கை ஒதுக்கி பணிகளை தொடங்க வேண்டும். மத்திய அரசு ஒதுக்கும் நிதியை முழுமையாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய், நகர வளர்ச்சி, கல்வித்துறைகளில் அதிகளவில் கோப்புகள் தேங்கியுள்ளன. அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

வழக்குகளை விரைவாக முடிக்க...

  கோர்ட்டுகளில் நிலுவையில் அரசு தொடர்பான வழக்குகளை விரைவாக முடிக்க தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அவர்கள் அரசு வக்கீல்களுடன் சேர்ந்து வழக்குகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு துறை செயலாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும். தங்களின் துறை தொடர்பான திட்ட பணிகளை ஆய்வு செய்ய வேண்டும். அப்போது மக்களுக்கு அருகில் அரசு நிர்வாகம் சென்றது போல் ஆகும்.

  நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். ஊழல்களுக்கு இடம் தரக்கூடாது. சாமானிய மக்களின் வேலைகளை விரைந்து முடித்து கொடுக்க வேண்டும். அவர்கள் அலுவலகங்களுக்கு வரும்போது உரிய கண்ணியத்துடன் நடத்த வேண்டும்.

மிக முக்கியமானது

  இது ஒரே நாளில் மாறாது. ஆனால் மாற்றத்தை ஏற்படுத்துவதில் நமது பங்கு மிக முக்கியமானது. நாம் அனைவரும் சேர்ந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினேன். தைரியமாக மக்கள் நலப்பணிகளை ஆற்ற வேண்டும். நிர்வாகத்தால் மாற்றம் நிகழ்ந்தால் அது மக்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். தூய்மை பாரதம் திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து அவற்றை செயல்படுத்த வேண்டும்.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Next Story