காண்டிராக்டர் வீட்டில் 200 பவுன் நகை கொள்ளை


காண்டிராக்டர் வீட்டில் 200 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 31 Aug 2021 8:54 PM GMT (Updated: 31 Aug 2021 8:54 PM GMT)

நெல்லையில் காண்டிராக்டர் வீட்டில் 200 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதில் தொடர்புடைய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நெல்லை:
நெல்லையில் காண்டிராக்டர் வீட்டில் 200 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதில் தொடர்புடைய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

காண்டிராக்டர்

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் மூகாம்பிகை நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 63). இவர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய காண்டிராக்டர் ஆவார்.
இவர் நேற்று காலை சென்னைக்கு செல்வதற்காக புறப்பட்டார். அப்போது பணம் எடுப்பதற்காக வீட்டில் ஒரு அறையில் உள்ள பீரோவை திறந்து பார்த்தார். அப்போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மாயமாகி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

200 பவுன் கொள்ளை

உடனே அங்கு வைத்திருந்த தங்க நகைகளை தேடிப்பார்த்தார். அப்போது 200 பவுன் நகைகளும் காணாமல் போயிருந்ததை அறிந்து திடுக்கிட்டார். யாரோ மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. 
இதுகுறித்து பார்த்தசாரதி உடனடியாக பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.  பார்த்தசாரதியின் வீட்டில் இருந்த அனைவரிடமும் விசாரணை நடத்தினர். மேலும் அக்கம்பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடமும் விசாரித்தனர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

கொள்ளையடிக்கப்பட்ட வீட்டின் பூட்டு உடைக்கப்படவில்லை. இதனால் நகை, பணம் எப்போது கொள்ளை போனது என்ற விவரம் தெரியவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு பார்த்தசாரதியின் வீட்டிற்கு ஏ.சி. எந்திரத்தை பழுது பார்ப்பதற்காக 2 பேர் வந்துள்ளனர். எனவே, அவர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். 
மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

இதேபோல் மற்றொரு கொள்ளை சம்பவம் நெல்லை வண்ணார்பேட்டையில் நடந்துள்ளது. அங்குள்ள பரணி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் அந்த பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள், அதன் அருகே உள்ள அலுவலகத்தில் தங்கி உள்ளனர். இந்த நிலையில் நேற்று சுரேஷ்குமார் அலுவலகத்துக்கு சென்று பார்த்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.7½ லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். 
இதுகுறித்து புகாரின் பேரிலும், பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். நெல்லையில் 2 இடங்களில் நடந்துள்ள இந்த கொள்ளை சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story