பெற்றோரின் ஒப்புதல் கடிதத்தை ஆசிரியர்களிடம் அளித்த மாணவர்கள்


பெற்றோரின் ஒப்புதல் கடிதத்தை ஆசிரியர்களிடம் அளித்த மாணவர்கள்
x
தினத்தந்தி 1 Sept 2021 2:24 AM IST (Updated: 1 Sept 2021 2:24 AM IST)
t-max-icont-min-icon

இன்று பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி அரியலூரில் பள்ளிக்கு வருவதற்கான பெற்றோரின் ஒப்புதல் கடிதத்தை மாணவ, மாணவிகள் ஆசிரியர்களிடம் அளித்தனர்.

அரியலூர்:

கிருமி நாசினி தெளிப்பு
கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள், 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்காக தமிழக அரசு அறிவிப்பின்படி இன்று(புதன்கிழமை) முதல் திறக்கப்படுகின்றன. இதையொட்டி அரியலூர் நகரில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளி, நிர்மலா மேல்நிலைப்பள்ளி உள்பட அனைத்து பள்ளிகளிலும் வகுப்பறைகள், விளையாட்டு மைதானம், ஆய்வுக்கூடம், மாணவ-மாணவிகள் காத்திருக்கும் அறை, ஆசிரியர்களின் அறை என அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
மேலும், பள்ளிக்கு வருவது குறித்து பெற்றோர்களிடம் ஒப்புதல் கடிதம் பெற்று வர வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியிருந்தது. அதன்படி பெற்றோர்களுடன் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்து தாங்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொண்டு, எழுதி வைத்திருந்த வினா-விடை தொகுப்புகள் மற்றும் தாங்கள் பள்ளிக்கு வருவதற்கான பெற்றோரின் ஒப்புதல் கடிதங்களை ஆசிரியர்களிடம் கொடுத்தனர்.
பள்ளிக்கு வர முடியாது...
ஒரு சில மாணவ, மாணவிகள் தங்களது உடல் நிலையைக் கருதி பள்ளிக்கு வர முடியாது என்று கடிதம் கொடுத்தனர். இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவ, மாணவிகள் வரும் நிலையில், அவர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி கொடுக்கப்பட்டு, தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை மற்றும் ஆக்சிஜன் அளவு சரியாக இருக்கிறதா? என்று பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டு, வகுப்புகளில் இடைவெளிவிட்டு அமர வைக்கப்படுவார்கள் என்று ஆசிரியர்கள் கூறினர்.இந்நிலையில் நேற்று அரியலூர் மற்றும் கோவிந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நடைபெற்று வரும் தூய்மை பணிகளை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி ஆய்வு செய்து, 100 சதவீத ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் பள்ளி வளாகம், வகுப்பறைகள், கழிவறைகள் மற்றும் குடிநீர் தொட்டிகள் உள்ளிட்டவற்றை முறையாக சுத்தம் செய்யவும், பள்ளி மாணவர்களுக்கு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உணவுகளை சமைக்கவும், போதுமான அளவில் உணவுப்பொருட்களை இருப்பு வைத்திடவும் அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து, கோவிந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை பார்வையிட்டார். ஆய்வின்போது அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story