போக்சோ சட்டத்தில் கைதான தொழிலாளி, கோர்ட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை
மங்களூருவில் போக்சோ சட்டத்தில் கைதான தொழிலாளி, கோர்ட்டு 6-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
மங்களூரு:
கட்டிட தொழிலாளி
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் உல்லால் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கின்யா பகுதியைச் சேர்ந்தவர் ரவிராஜ்(வயது 31). கட்டிட தொழிலாளியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அதாவது நேற்று முன்தினம் காலையில் அந்த சிறுமி தனது வீட்டில் இருந்து அருகே உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க வந்திருக்கிறாள். அப்போது அந்த சிறுமியை வழிமறித்த ரவிராஜ், அவளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அந்த சிறுமி கூச்சலிட்டாள். அவளின் கூச்சல் சத்தத்தைக்கேட்டு ஓடி வந்த பொதுமக்கள், ரவிராஜை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவரை உல்லால் போலீசில் ஒப்படைத்தனர்.
தற்கொலை
இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ரவிராஜை கைது செய்தனர். நேற்று மதியம் அவரை மங்களூரு கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் அழைத்து வந்தனர். இந்த நிலையில் போலீசாரின் கவனத்தை திசை திருப்பிவிட்டு திடீரென கோர்ட்டில் உள்ள 6-வது மாடிக்கு ஓடினார்.
பின்னர் 6-வது மாடியில் இருந்து அவர் கீழே குதித்து ரவிராஜ் தற்கொலை செய்து கொண்டார். போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்ததால் அவமானத்தால் ரவிராஜ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி உல்லால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story