சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட கோரி கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் போராடும் - சித்தராமையா பேட்டி


சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட கோரி கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் போராடும் - சித்தராமையா பேட்டி
x
தினத்தந்தி 31 Aug 2021 9:06 PM GMT (Updated: 31 Aug 2021 9:06 PM GMT)

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட கோரி கர்நாடக சட்டசபையில் போராட்டம் நடத்துவோம் என்று சித்தராமையா கூறினார்.

பெங்களூரு:

  கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மக்கள்தொகை கணக்கெடுப்பு

  90 ஆண்டுகளுக்கு முன்பு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சமூக நலத்திட்டங்களும் அவ்வாறே செயல்படுத்தப்படுகின்றன. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அனைத்து சாதிகளுக்கும் போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் நான் முதல்-மந்திரியாக இருந்தபோது ரூ.180 கோடி செலவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

  பீகார் முதல்-மந்திரி நிதீஷ்குமார், அனைத்துக்கட்சி குழுவை அழைத்து சென்று பிரதமரை நேரில் சந்தித்து சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அதனால் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தியது போலவே, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பும் நடத்தினால் நல்லது.

உரிய முன்னேற்பாடுகள்

  இந்த சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட கோரி சட்டசபையில் போராட்டம் நடத்துவோம். ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ. காங்கிரசில் சேருவது தொடர்பாக அவர் என்னையும், கட்சி தலைவர் டி.கே.சிவக்குமாரையும் நேரில் சந்தித்து பேசினார். இதுகுறித்து எங்கள் கட்சி மேலிட தலைவர்களுடன் விவாதிப்போம்.

  மைசூரு மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) ஒப்பந்தப்படி நடந்து கொள்ளவில்லை. அதனல் மூன்று கட்சிகளும் மேயர் வேட்பாளரை நிறுத்தியது. அதிக கவுன்சிலர்கள் பா.ஜனதா வசம் இருந்ததால், அக்கட்சி மேயர் பதவியை கைப்பற்றியது. கொரோனா கட்டுக்குள் இருப்பதால் உரிய முன்னேற்பாடுகளை செய்து கொண்டு பள்ளிகளை திறப்பது தான் நல்லது.

கொரோனா விதிமுறைகள்

  அதேபோல் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாட சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கலாம். ஆனால் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவதை தவிர்க்க வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். மத்திய மந்திரிகள் ஆயிரக்கணக்கான மக்களை ஒன்று திரட்டி மக்கள் ஆசி யாத்திரையை நடத்தினர். அங்கு கொரோனா விதிமுறைகள் மீறப்பட்டன. அவ்வாறு செய்திருக்கக்கூடாது.

  கர்நாடகத்தில் காங்கிரஸ் ‘பியூஸ்' போய்விட்டதாக மந்திரி ஈசுவரப்பா கூறியுள்ளார். சட்டசபை தேர்தல் வந்தால், எந்த கட்சி ‘பியூஸ்' போய் உள்ளது என்பது தெரியும். மூளைக்கும், நாக்கிற்கும் தொடர்பு இல்லாதவர் ஈசுவரப்பா. அதனால் அவரது பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் கடந்த 10 நாட்களாக ஜிந்தால் இயற்கை சிகிச்சை மையத்தில் சேர்ந்து சிகிச்சை பெற்றேன். கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பிறகு எனது உடல் எடை 3 முதல் 4 கிலோ வரை எடை அதிகரித்தது. இயற்கை சிகிச்சைக்கு பிறகு 3 கிலோ எடை குறைந்துள்ளேன்.
  இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Next Story