ரூ.3 லட்சம் குட்கா பறிமுதல்: 2 பேர் கைது


ரூ.3 லட்சம் குட்கா பறிமுதல்: 2 பேர் கைது
x
தினத்தந்தி 31 Aug 2021 9:09 PM GMT (Updated: 31 Aug 2021 9:09 PM GMT)

நெல்லையில் ரூ.3 லட்சம் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

நெல்லை:
நெல்லையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.

குட்கா பறிமுதல்

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் உத்தரவின்பேரில், சட்டம்- ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் அறிவுரையின் பேரில், உதவி போலீஸ் கமிஷனர் விஜயகுமார் மேற்பார்வையில் தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனி முருகன், தில்லைநாயகம் மற்றும் போலீசார் நேற்று தச்சநல்லூர் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரில் 93 கிலோ குட்காவை விற்பனைக்காக கடத்தி வந்ததாக மானூர் அருகே உள்ள குத்தாலப்பேரியை சேர்ந்த ஆறுமுகம் (வயது40) என்பவரை கைது செய்தனர். மேலும்  குட்காவையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் மோட்டார் சைக்கிளில் 30 கிலோ குட்கா புகையிலை கொண்டு சென்ற மானூரைச் சேர்ந்த சேக்மைதீன் (47) என்பவரையும் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து குட்காவை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மதிப்பு ரூ.2 லட்சத்து 90 ஆயிரம் ஆகும். புகையிலை விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட கார், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

குண்டர் சட்டம்

இதுகுறித்து நெல்லை மாநகர சட்டம்- ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் கூறுகையில், குட்காவை இவர்கள் பெங்களூரூவில் இருந்து கொண்டு வந்து மிகச்சிறிய பொட்டலமாக போட்டு கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் கடைகளுக்கு கொண்டு போய் விற்பனை செய்து வருவது தெரியவந்தது. நெல்லை டவுன் உட்கோட்ட பகுதியில் மட்டும் கடந்த 2 மாதங்களில் 14 குட்கா வழக்குப்பதிவு செய்யப்பட்டு 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 168 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 4 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். தொடர்ந்து குட்கா, கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக்கூடங்களின் அருகில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றார்.

Next Story