காரில் ‘ஏர்பேக்’ திறக்காததால் 7 பேர் பலி- இணை போலீஸ் கமிஷனர் ரவிகாந்தேகவுடா


காரில் ‘ஏர்பேக்’ திறக்காததால் 7 பேர் பலி- இணை போலீஸ் கமிஷனர் ரவிகாந்தேகவுடா
x
தினத்தந்தி 31 Aug 2021 9:20 PM GMT (Updated: 31 Aug 2021 9:20 PM GMT)

‘ஷீட் பெல்ட்’ அணியாமல் விதிமுறையை மீறி இருந்ததுடன், காரில் ‘ஏர்பேக்’ திறக்காததால் விபத்தில் 7 பேர் பலியாக நேரிட்டதாக போக்குவரத்து இணை போலீஸ் கமிஷனர் ரவி காந்தேகவுடா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

போக்குவரத்து விதிமுறை மீறல்

  பெங்களூரு கோரமங்களாவில் நடந்த சொகுசு கார் விபத்தில் தமிழ்நாடு எம்.எல்.ஏ.வான பிரகாசின் மகன் கருணா சாகர் உள்பட 7 பேர் பலியாகி இருந்தார்கள். விபத்திற்கு உள்ளான கார், ஆடி கியூ-3 என்ற சொகுசு கார் ஆகும். அந்த காரில் 5 பேர் செல்லலாம். அந்த சொகுசு காரின் முன்பகுதியில் உள்ள ஏர்பேக் திறக்கப்பட்டு இருந்தால், பெரும் உயிர் சேதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டு இருக்கும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

  ஆனால் அந்த காரில் எம்.எல்.ஏ.வின் மகன் உள்பட 7 பேர் விதிமுறைகளை மீறி சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் டிரைவர் மதுஅருந்தி இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து பெங்களூரு போக்குவரத்து இணை போலீஸ் கமிஷனர் ரவி காந்தே கவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

‘ஏர்பேக்’ திறக்காததால்...

  பெங்களூரு கோரமங்களாவில் நடந்த கோர விபத்தில் எம்.எல்.ஏ.வின் மகன் உள்பட 7 பேர் உயிர் இழந்துள்ளனர். இவர்களில் 3 பேர் பெண்கள், 4 பேர் ஆண்கள் ஆவார்கள். போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் காரை ஓட்டியதே விபத்திற்கு முக்கிய காரணமாகும். அந்த சொகுசு காரை அதிவேகமாகவும், டிரைவர் அலட்சியமாகும் ஓட்டி சென்றுள்ளார். 5 பேருக்கு பதிலாக காரில் 7 பேர் பயணம் செய்துள்ளனர்.

  காரில் இருந்த ஒருவர் கூட ‘ஷீட் பெல்ட்’ அணியாமல் விதிமுறையை மீறி உள்ளனர். ‘ஷீட் பெல்ட்’ அணிந்திருந்தாலோ அல்லது காரின் முன்பகுதியில் உள்ள ‘ஏர்பேக்’ திறந்திருந்தாலோ அனைவரும் உயிர் இழந்திருக்க மாட்டார்கள். ‘ஏர்பேக்’ திறக்காமல் இருந்ததால் கார் முற்றிலும் நொறுங்கி சேதம் அடைந்து 7 பேரும் பலியாக நேரிட்டுள்ளது. சம்பவம் குறித்து ஆடுகோடி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
  இவ்வாறு அவர் கூறினார்.

விபத்து வீடியோ வெளியாகி பரபரப்பு

தி.மு.க. எம்.எல்.ஏ.வான பிரகாசின் மகன் உள்பட 7 பேர் பலியான விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த கார் முற்றிலும் நொறுங்கி சேதம் அடைந்திருந்தது. அந்த சொகுசு கார் கர்நாடக பதிவு எண்ணை கொண்டதாகும். அதாவது கே.ஏ.03-எம்.ஒய்.6666 என்பதாகும். சொகுசு கார் விபத்திற்கு உள்ளாகும் வீடியோ காட்சிகள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. 

அந்த வீடியோ காட்சியில் வேகமாக செல்லும் கார், தடுப்பு சுவரில் மோதி விட்டு, அங்குள்ள கட்டிடத்தின் மீது மோதுகிறது. மோதிய வேகத்தில் கார் சிறிதளவு பின்னோக்கி வருகிறது. அத்துடன் காரின் இடதுபுறம் உள்ள 2 டயர்களும் கழன்று, பறந்து போய் விழுவது போன்று அந்த காட்சிகள் உள்ளது.

டிரான்ஸ்பார்மர்... 

விபத்து நடந்தது பற்றி கோரமங்களாவை சேர்ந்த வாடகை கார் டிரைவர் சதீஷ் கூறியதாவது:-

அதிகாலை 1.30 மணியளவில் எனது வீட்டின் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்தது போன்று ஒரு சத்தம் கேட்டது. உடனே பதறியபடி வெளியே வந்து பார்த்தேன். அப்போது தான் கார் விபத்திற்கு உள்ளாகி இருந்தது தெரியவந்தது. காரில் இருந்த ஒருவர் வாயில் இருந்து ரத்தம் சிந்தியபடி இருந்தார். அவரை மீட்க நானும், அங்கிருந்த ஆட்டோ டிரைவரும் முயன்றோம். 

கார் கதவை திறக்க முடியாமல் போனது. காரில் இருந்து புகை வந்ததால் முன் எச்சரிக்கையாக தண்ணீரை ஊற்றி விட்டு, நானும், ஆட்டோ டிரைவரும் காருக்குள் சிக்கியவரை மீட்க நடவடிக்கை எடுத்தோம். அந்த சந்தர்ப்பத்தில் போலீசாரும் வந்ததால், காரில் இருந்தவர்களை ஆட்டோ, வாடகை காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பினோம். வேகமாக வந்து கார் மோதியதால் பயங்கர சத்தம் கேட்டு இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.

காரில் செல்லும் வீடியோ 

விபத்தில் பலியான கருணா சாகரிடம் நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு வீட்டுக்கு சாப்பிட வருமாறு குடும்பத்தினர் கேட்டு இருந்தனர். ஆனால் அவர் வரவில்லை என்று சொன்னதாக தெரிகிறது. பெங்களூருவுக்கு நேற்று முன்தினம் காலையிலேயே கருணா சாகர் வந்திருந்தார். எலெக்ட்ரானிக் சிட்டியில் உள்ள மேம்பாலத்தில் அவர் சொகுசு காரை ஓட்டியபடி சென்றிருந்தார். 

அதனை தனது செல்போனில் கருணா சாகர் வீடியோவும் எடுத்திருந்தார். அந்த வீடியோவை நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவும் தற்போது சமூக வலைதளஙகளில் பரவி வருகிறது.

பிந்துவின் தந்தை பேட்டி

பெங்களூரு கோரமங்களாவில் நடந்த விபத்தில் பெங்களூரு முருகேஷ் பாளையா 2-வது கிராசை சேர்ந்து பிந்து என்பவரும் உயிர் இழந்திருந்தார். அவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். பிந்துவை தான் கருணா சாகர் திருமணம் செய்ய முடிவு செய்திருந்ததாக தெரிகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கருணா சாகருக்கும், பிந்துவுக்கும் திருமணம் செய்து வைக்க 2 பேரின் குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர். சில பிரச்சினைகளால் திருமண பேச்சு தொடராமல் இருந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து பிந்துவின் தந்தை நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘எனது மகள் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறாள். நேற்றுமுன்தினம் இரவு 8 மணிக்கு அவரை தொடர்பு கொண்டபோது, சாப்பிட்டு விட்டு விடுதியில் படுத்திருப்பதாக கூறி இருந்தார். இன்று காலை (நேற்று) தான் விபத்தில் மகள் இறந்தது தெரியவந்தது. கருணா சாகருக்கு எனது மகளை திருமணம் செய்து வைக்க பேச்சு நடந்தது. பெரிய குடும்பம் என்பதால், நான் தயங்கினேன். எனது மகள் கருணா சாகரை தான் திருமணம் செய்வதாக உறுதியாக கூறினார். அவளது விருப்பத்தின்படியே கருணா சாகரை திருமணம் செய்ய முடிவு செய்திருந்தோம், என்றார்.

Next Story